பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருக்கும் ட்விட்டர் தளத்தில் தற்போது வடிவேலும் இணைந்திருக்கிறார்.
ரஜினி, கமல், அஜித், நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நடிகர்கள், நடிகைகள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருக்கிறார்கள்.
காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் தான் ட்விட்டர் தளத்தில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது வடிவேலு, @Actor_Vadivelu என்ற முகவரியில் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.
முதல் செய்தியாக, “வந்துட்டேன்யா வந்துட்டேன்” என்று ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். ஆனால் இந்த ட்விட்டர் கணக்கு உண்மையில் வடிவேலுவினுடையது என்று கேள்வி நிலவியது.
இறுதியாக, வடிவேலு பேசிய ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு அந்த ட்விட்டர் கணக்கு வடிவேலுவினுடையது தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.
அந்த வீடியோ பதிவில் வடிவேலு, "ஹலோ.. ட்விட்டர் ஃபேன்ஸ்.. எல்லாருக்கும் வணக்கம். என் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து அக்கவுன்ட் ஒப்பன் பண்ணுங்க.. அக்கவுன்ட் ஒப்பன் பண்ணுங்கனு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நான் ஏற்கனவே பேங்க்ல அக்கவுன்ட் ஒப்பன்ல தானே இருக்கு. மறுபடியும் எதுக்குனு கேட்டாங்க.
இல்லங்க.. ட்விட்டர்ல ஒரு அக்கவுன்ட் ஒப்பன் பண்ணுங்கனு சொன்னாங்க. அந்த பேங்க்ல பணத்தை பரிமாறது, இந்த ட்விட்டர் ரசிகர்களோட அன்பை பரிமாற பேங்க்னு சொன்னாங்க. அப்படியா.. அப்போ உடனே கடையை தொறங்க. நான் சந்திச்சே ஆகணும்னு தொறந்தாச்சு. இனிமேல் நாம அடிக்கடி மீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம்.
இனிமேல், நாம அடிக்கடி மீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம். இடையில ஒரு சின்ன கேப் விழுந்து போச்சு. விரைவில் உங்கள சந்திப்பேன். என்னோட படம் ரிலீஸாக போகுது. 'ஜகஜால புஜபல தெனாலிராமன்' படம் முழுமையாக விரைவில் சந்திப்பேன்." என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் தளம் ஆரம்பிக்கப்பட்ட போது 700 பேர் மட்டுமே ஃபாலோயர்ஸாக இருந்தார்கள், வீடியோ பதிவேற்றம் செய்தவுடன் அவரது கணக்கில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.