இயக்குநர் ஷங்கரின் '2.0' கதையை விவரித்த வகையில் வியப்படைந்திருக்கிறார் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது. அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முதற்கட்ட படப்பிடிப்பில் படமாக்கி இருக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தின் சவுண்ட் டிசைனராக ஒப்பந்தமாகி இருக்கிறார் ரசூல் பூக்குட்டி. 'எந்திரன்' படத்துக்கு இவர் தான் சவுண்ட் டிசைனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'2.0' படத்துக்கு ஒப்பந்தமாகி இருப்பது குறித்து ரசூல் பூக்குட்டி, "ஐந்து தண்ணீர் பாட்டில் உடன் சுமார் நாலரை மணி நேரம் இயக்குநர் ஷங்கர் '2.0' கதையை விவரித்தார். நான் பேச முடியாத அளவுக்கு வியப்படைந்து விட்டேன். சிட்டி அப்டேட் ஆகி இருக்கும் '2.0' படத்தில் பணியாற்ற இருக்கிறேன். இயக்குநர் ஷங்கரின் தெளிவான பார்வையில் பணியாற்ற இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
'கபாலி' படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு, '2.0' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார் ரஜினி.