கமலின் பிறந்த நாளன்று 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரெய்லர் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'விஸ்வரூபம்' படத்தின் முடிவில் 'விரைவில் விஸ்வரூபம் 2' என்று முடிந்திருந்தார் நடிகர் மற்றும் இயக்குநர் கமல்ஹாசன்.
நீண்ட பிரச்னைகளுக்கு பிறகு வெளியானாலும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து, சாதனை படைத்த படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்த படத்தினை கமல் இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார்.
கடந்தாண்டு 'விஸ்வரூபம்' படத்தின் டிரெய்லர் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. அது போலவே இந்தாண்டு பிறந்த நாளில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரெய்லரை வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறாராம் கமல்.
ஏற்கனவே 'விஸ்வரூபம்' படப்பிடிப்பின் போதே 'விஸ்வரூபம் 2’ படத்தின் 60% படப்பிடிப்பை முடித்துவிட்டார் கமல். தற்போது மீதமுள்ள படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லரை முன்னரே வெளியிட திட்டமிட்டாராம் கமல். ஆனால் எடிட்டிங் பணிகள் முடிந்தவுடன் வெளியிடலாம் என்று ஒத்திவைத்து விட்டாராம். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் பிறந்தநாளன்று டிரெய்லரை வெளியிடலாம் என்று யோசித்து வருகிறார் என்கிறார்கள்.
'விஸ்வரூபம் 2' படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.