'தலைவா' பட வெளியீட்டின்போது ஏற்பட்ட சிக்கல் போலவே 'கத்தி' படமும் வெளியாகுமா, ஆகாதா என்ற சர்ச்சை தொடர்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனமான 'லைக்கா' தான் 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது என்று பட ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்த உடன், தற்போது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் 'கத்தி' படத்தை வெளியிட்டால் போராட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், 'கத்தி' வெளியானால் பிரச்சினை என்றவுடன் தயாரிப்பாளர்கள் நேற்று (அக்.19) போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு சென்று பேசியிருக்கிறார்கள். அப்போது, "இப்படத்தின் கதையிலோ, தலைப்பிலோ பிரச்சினையில்லை. தயாரிப்பு நிறுவனத்தில் தான் பிரச்சினை. ஆகையால் நீங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தான் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும்" என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
அதற்கு 'கத்தி' படக்குழு தரப்பில், "பணம் கொடுத்தது லைக்கா நிறுவனம் என்றாலும், தயாரித்தது ஐங்கரன் நிறுவனம் தான்" என்று கூறவே, "இத்தகவல் எல்லாம், நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் தான் பேச வேண்டும். ஆகையால், அங்கு பேசிவிட்டு வாருங்கள்" என்று போலீஸ் தரப்பில் பேசி அனுப்பி இருக்கிறார்கள்.
இன்று (திங்கள்கிழமை) தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசிய பிறகு தான், இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
இப்பிரச்சினை குறித்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் "'கத்தி' படம் குறித்து இருதரப்பினர் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது. படம் வெளியாவது குறித்த இறுதி முடிவு இன்று மாலை 3 மணிக்கு தெரியும்" என்று கூறியிருக்கிறார்.
'தலைவா' படத்தைப் போலவே 'கத்தி'யும் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. 'தலைவா' படத்தில் TIME TO LEAD என்ற தலைப்பு வாசகம் நீக்கப்பட்டதும் படம் வெளியானது. அதே போல், 'கத்தி'யும் லைக்கா நிறுவனம் என்ற பெயர் நீக்கத்திற்கு பிறகு வெளியாகுமா என்பது இன்று மாலை தெரியும். அவ்வாறு நீக்கினால், இதுவரை அக்.22 முதல் என்று அடித்து வைத்துள்ள போஸ்டர்களின் நிலைமை..?