தன்னை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகை ஷர்மிளா மனு கொடுத்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் ஷர்மிளா. கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், உன்னை கண் தேடுதே, முஸ்தபா உள்பட 52 படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்த ராஜேஷை நான் காதலித்துவந்தேன். நாங்கள் வெவ்வேறு மதம் என்பதால் எங்கள் திருமணத்துக்கு வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. எனவே, வீட்டை விட்டு வெளியேறி 2006-ல் திருமணம் செய்துகொண்டோம். சென்னை ஆழ்வார்திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தோம். எனக்கு ஐந்தரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சில நாட்களில் என் கணவர் அதிகம் மது குடிக்க ஆரம்பித்தார். என்னை சந்தேகப்பட்டு கொடுமைப் படுத்தினார். இதையடுத்து, அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன்.
கடந்த 23-ம் தேதி என் வீட்டுக்கு வந்த ராஜேஷ், என்னை அடித்துப் போட்டுவிட்டு என்னிடம் இருந்து குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டார்.
குழந்தையை கொடுக்கச் சொல்லி பலமுறை கேட்டும் தர மறுத்து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு போலீஸில் புகார் கொடுத் துள்ளேன்.
இவ்வாறு ஷர்மிளா கூறினார்.
இதுகுறித்து ராஜேஷிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘விருகம்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் குழந்தையைத் தூக்கி வந்துள் ளேன்’’ என்று மட்டும் கூறினார்.