தமிழ் சினிமா

மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் சாஹூ

ஸ்கிரீனன்

'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு 'சாஹூ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் 'பாகுபலி 2' பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 3 வருடங்களாக 'பாகுபலி' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ்.

'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'பாகுபலி' கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இப்புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்துக்கு 'சாஹூ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். மூன்று மொழிகளிலுமே இதே பெயரில் தான் தயாராகவுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படம், காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சுஜித். இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது. யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. சங்கர்-இசான்-லாய் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சாபுசிரில் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்ளவுள்ளார். 'சாஹூ' படத்தின் டீஸர் 'பாகுபலி 2' படத்தோடு வெளியாகவுள்ளது.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில், ரூ.35 கோடி ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டுமே செலவிடப்படவுள்ளது. தெலுங்கு சினிமாவில் ஒரு சண்டைக்காட்சிக்கு செலவழிக்கப்பட்டும் அதிகபட்ச தொகை இது. நிறைய கார்களும், ஆக்‌ஷனும் நிறைந்த, 20 நிமிட சேஸிங் காட்சி இது.

SCROLL FOR NEXT