பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணே குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுதான் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’. ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கம்.
பன்னெடுங்காலமாய் நடப்பதுதான் என்றாலும் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன்முறைக்கு எதிரான குரல்கள் அதிகரித்துள்ளன. என்றாலும் அத்தகைய குற்றங்கள் குறைவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் நூதனமான பாலியல் வன்முறை குறித்தும் பாதிக்கப்பட்ட பெண் படும் அவதிகள் குறித்தும் இந்தப் படம் நம் கவனத்தைக் கோருகிறது. சீரழிக்கப் பட்டு, அவமானப்படுத்தப் படும் பெண் மையின் கோபம் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்னும் சாத்தியக் கூறையும் அழுத்தமாக முன்வைக்கிறது.
பாளையங்கோட்டையில் பிறந்து சென்னையில் செவிலிப் பெண்ணாகப் பணியாற்றும் 22 வயது பெண் மாலினி யின் (நித்யா மேனன்) கனவு கனடாவில் சென்று பணியாற்றுவது. விசா பெற்றுத் தரும் பொறுப்பில் உள்ள வருண் கார்த்திகேயனும் (கிருஷ். ஜே. சதார்) மாலினியும் காதலிக்கிறார்கள். வருணுக்கு ஏற்படும் ஒரு நெருக்கடியால் இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் வருணின் முதலாளி பிரகாஷ் (நவீன்) மாலினியை மிருகத்தனமாகத் தாக்கி அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்கிறான். காதலனின் துணையுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள மாலினி போராடிக்கொண்டிருக்கும்போதே அந்தக் குற்றம் மீண்டும் ஒரு முறை நிகழ்கிறது. போதாக்குறைக்கு மாலினி யின் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றமும் சுமத்தப்பட்டு அவள் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது.
தனக்கு நடந்த அனைத்திலும் வரு ணுக்கும் பங்கு இருக்கிறது என்பது மாலினிக்குத் தெரியவருகிறது. வரு ணின் துரோகத்துக்கும் பிரகாஷின் மிருகத்தனத்துக்கும் தக்க தண்டனை வழங்க அவள் முடிவுசெய்கிறாள். சிறையில் அவளுக்கு உதவி கிடைக் கிறது. மாலினி பழிவாங்கினாளா என்பதுதான் மீதிக்கதை.
நடிகை ப்ரியா இயக்கியுள்ள இந்தப் படம், பாலியல் வன்முறை குறித்த பொதுமக்களின் கோபத்துக் கான வடிகால் என்ற அளவில் வலுவானவே இருக்கிறது. குறிப்பாக உச்சக் காட்சியும் அதில் மாலினி பேசும் வசனங்களும். பாலியல் வல்லுறவு பற்றிப் பேசும்போதெல்லாம் பெண் களின் நடை, உடை, பாவனை, நடத்தை ஆகியவற்றைக் குறைகூறும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இந்தப் படம் அவர்களுக்குச் சரியான விதத்தில் பதில் சொல்கிறது. சிறைகளில் பெண்க ளின் நிலை, அங்கு நடக்கும் குற்றங்கள் ஆகியவையும் சித்தரிக்கப்படுகின்றன.
பாலியல் குற்றத்துக்கு மரணமும் ஆண்மை நீக்கமும் சரியான தண்ட னையகுமா என்பது குறித்து விவாதம் நடைபெற்றுவரும் சூழலில், பழிவாங்கு தலை ஆதரிக்கும் இந்தப் படம், பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் நின்று பேசுகிறது.
சிக்கலான வேடத்தை ஏற்றுள்ள நித்யா மேனன் சிறப்பாக நடித்துள்ளார். காதல், பயம், மிரட்சி, கோபம் ஆகிய அனைத்தையும் அவரது விழிகளே காட்டிவிடுகின்றன. கிருஷ். ஜே. சதார், நவீன் ஆகியோர் நம்பகமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கோவை சரளாவின் காமெடி முயற்சி வெறும் சத்தமாகவே முடிந்துபோகிறது. காதல் உருவாகும் விதம், துரோகம் நடக்கும் விதம், பழிவாங்கல் ஆகிய அம்சங்கள் நம்பகத்தன்மையோடு காட்டப்பட வில்லை. வருணின் வீட்டில் நித்யா தங்குவது, இரண்டாம் முறை பாலியல் வன்முறை நிகழுவது ஆகியவற்றுக் கான பின்னணிகள் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. திரைக்கதையில் பழிவாங்குவதற்கு இருக்கும் முக்கியத் துவம் விழிப்புணர்வூட்டுவதற்கு இல்லை. பாலியல் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது படத்துக்கு ‘யு’ சான்றிதழ் எப்படி கிடைத்தது என்ற வியப்பு வருகிறது. இருந்தாலும் அழுத்தமான செய்தியை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்.