ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கபாலி' படக்குழு தனது 'மடாரி' (Madaari) படத்தின் போஸ்டர் வடிவமைப்பைத் அப்பட்டமாக காப்பி அடித்துவிட்டதாக நடிகர் இர்பான் கான் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் உள்ள ஷாப்பிங் மாலில் 'மடாரி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்தி நடிகர் இர்பான் கான். அப்போது 'கபாலி' படத்தின் போஸ்டர் ஒற்றுமைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இர்பான் கான், "எனக்கு அதைப் பற்றி தெரியாது. நாங்கள் சிறியளவிலான படம் எடுத்திருக்கிறோம். ரஜினிகாந்த் படக்குழுவினர் எங்களது போஸ்டரை அபகரித்துக் கொண்டார்கள். இரண்டு படங்களின் போஸ்டரையும் பாருங்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவருடைய படத்தையும், எங்களுடைய படத்தையும் பாருங்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.
'மடாரி' மற்றும் 'கபாலி' இரண்டு படங்களின் போஸ்டருமே, வானளாவிய கட்டிடங்கள் நாயகனின் முகத்துக்கு பக்கவாட்டில் இருப்பது போல வடிவமைப்பட்டுள்ளன.
மேலும், 'மடாரி' படக்குழுவினர் அதிகாரபூர்வ போஸ்டர் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் ரஜினி ரசிகர்களோ 'கபாலி' பட போஸ்டர் அதிகாரபூர்வமானது இல்லை என்றும், ரசிகர்களின் உருவாக்கம் என்றும் தெரிவித்து வருகிறார்கள். 'கபாலி' படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரபூர்வ போஸ்டர்களில் இப்போஸ்டர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'மடாரி' படம் குறித்து இர்பான் கான் "இப்படம் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. இப்படம் உங்களைப் பற்றி பேசும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நாயகன் இருப்பான், அந்த நாயகன் எழும் போது யாருமே அவனை எதிர்கொள்ள முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.
'மடாரி' மற்றும் 'கபாலி' இரண்டுமே ஜூலை 15ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.