‘கபாலி’ படத்தை வெளியிட தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த சுக்ரா பிலிம்ஸ் நிறு வனத்தின் பங்குதாரர் மகாபிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட் டங்களில் விநியோகம் செய்யும் உரிமையை ரூ.13 கோடியே 25 லட்சம் கொடுத்து எங்கள் நிறுவனம் பெற்றது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால், எங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. எங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈ டான ரூ.89 லட்சத்தை இதுவரை தரவில்லை.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் ஜூலை 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தயாரிக்கப்படும்போதே எங்களுக்கு தர வேண்டிய ரூ.89 லட்சத்தைக் கொடுத்துவிடுவதாக இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உத்தரவாதம் அளித் திருந்தார். அதன்படி பணத்தை தராததால், எங்கள் நிறுவனத் துக்கு பணம் தரும் வரை ‘கபாலி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்க றிஞர் விடுதலை வாதிடும்போது, “தாணு அளித்துள்ள ஒரு பேட்டி யில் ‘லிங்கா’ படத்தினால் நஷ்டம டைந்த விநியோகஸ்தர்களுக்கான இழப்பீட்டுத் தொகை தன்னி டம் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அப்பணத்தைத் தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடிக் கிறார் . அவரிடம் பணத்தை வசூலிக்க இதுவே சரியான தருணம் என்பதால் , அப்பணத்தை வழங்கும் வரை ‘கபாலி’ திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
கலைப்புலி எஸ்.தாணு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர விந்த் பாண்டியன் வாதிடும்போது, “உள்நோக்கத்துடன் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘லிங்கா’ படப் பிரச்சினைக்கும் ‘கபாலி’ திரைப்படத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘கபாலி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.