தமிழ் சினிமா

முதன் முறையாக இணையும் சிம்பு - வைரமுத்து கூட்டணி

ஸ்கிரீனன்

'சக்கப் போடு போடு ராஜா' படத்தில் முதல் முறையாக சிம்புவின் இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.

பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வரும் சிம்பு, 'சக்கப் போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக வலம் வரவுள்ளார். சந்தானம், வைபவ் சாண்டில்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை வி.டி.வி கணேஷ் தயாரித்து வருகிறார்.

பிரதான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்ட படக்குழு, தற்போது பாடல்களை படமாக்க திட்டமிட்டு வருகிறது. இதில் முதல் முறையாக சிம்புவுக்கு பாடல் எழுதியுள்ளார் வைரமுத்து. இதற்கு முன்பாக சிம்பு நடித்த படங்களில் வைரமுத்து பாடல் எதுவும் எழுதியதில்லை.

சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் படத்துக்கு, 'காதல் தேவதை' என்ற பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. யுவன் பாடியுள்ளார். 'சக்கப் போடு போடு ராஜா' பாடல் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு.

அடுத்த வாரத்தில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்லவுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'சக்கப் போடு போடு ராஜா' பின்னணி இசையில் கவனம் செலுத்தவுள்ளார்.

SCROLL FOR NEXT