'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ்சிவன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா.
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சிங்கம் 3' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழு, படப்பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இயக்குநர் முத்தையா, விக்னேஷ்சிவன் உள்ளிட்ட பலர் சூர்யாவை சந்தித்து கதைகளைத் தெரிவித்து வந்தார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று சூர்யாவின் அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தில் சூர்யாவோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.