தமிழ் சினிமா

யேசுதாஸ் அறிவுறுத்தலை பின்பற்றி வருகிறேன்: கமல்

ஸ்ரீதர்

எனது படங்களில் நான் பாடி வருவதற்கு காரணம் யேசுதாஸ் தான் என்று 'சிகரம் தொடு' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் கூறினார்.

விக்ரம் பிரபு, மோனல் காஜர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்ப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிகரம் தொடு', இப்படத்தை ’தூங்காநகரம்’ படத்தின் இயக்குநர் கௌரவ் இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்தின் இசையினை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட யேசுதாஸ் பெற்றுக் கொண்டார்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் லிங்குசாமி, பிரபுசாலமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் பேசியது, "என்னை விடவும் பிரபுவை விடவும் அதிகமாக சிவாஜி கணேசன் மடியில் தவழ்ந்த பிள்ளை விக்ரம் பிரபு. முயற்சி தான் திருவினையாக்கும், அவர், அவரது முழு உழைப்பினால் தான் இன்று இந்தளவிற்கு வளர்ந்துள்ளார். அதற்கு சிவாஜியின் ஆசிர்வாதம் உள்ளது.

நாங்கள் வெவ்வேறு வீடுகளிலிருந்து வந்தாலும் ‘அன்னை இல்லம்’ எங்கள் எல்லோருக்கும் ஒரே வீடு தான். இப்படம் வெற்றியடைவது விக்ரம் பிரபுவிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல் எனக்கும் முக்கியம்.

என்னுடைய சிறு வயதில் நான் சினிமா நட்சத்திரம் ஆகிவிட்ட பொழுது, யேசுதாஸ் ஆகவில்லை. அன்று அவர்களை பாட சொல்லி கேட்ட அதே குரல் எந்தளவிற்கு இனிமையாய் இருந்ததோ இன்றும் அந்தளவிற்கு இனிமையாய் உள்ளது. வெண்கலத்தை உருக்கி உருக்கி பாடிய மாதிரி உள்ளது உங்களது குரல் யேசுதாஸ் அண்ணா. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நான் பாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் யேசுதாஸ் அண்ணா தான். உன் குரல் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் கூறினார். பிறகு தனியாகச் சென்று 'நம்பிட்டான்' என்று சிரித்திருப்பார். அன்று அவர் சொன்னதால் தொடர்ச்சியாக பாடி வருகிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT