தமிழ் சினிமா

பி.சி.ஸ்ரீராமிடம் சேர்வதற்காக
 ஊரை விட்டு ஓடிவந்தேன்! - ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்

மகராசன் மோகன்

"மனதில் பட்டதை படம் பிடிப்பதும், ஓவியம் வரைவதிலும் மட்டுமே ஆர்வமாக இருந்த என் கல்லூரி நாட்களில் அந்த திரைப்படத்தை முதன் முறையாக பார்த்தேன். அப்போதிலிருந்து தொடர்ந்து 100 தடவையாவது அப்படத்தை பார்த்திருப்பேன். அந்த ஒளிப்பதிவாளரின் ஃபோட்டோ கிராஃபி ரசனை, அனுபவம், ஆளுமை எல்லாவற்றையும் அதன்பின் தேடித்தேடி படித்தேன். அப்படிப்படித்த ஒரு புத்தகத்தில் அவருக்குப் பிடித்த நிறம் கருப்பு என்று இருந்தது. அவரை முதன்முதலாக பார்க்கும்போது கருப்பு நிறத்தில் சட்டை அணிந்து அவர்முன் நின்றிருக்கிறேன்!" பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தந்த பாதிப்பைத்தான் இப்படி வியந்து பேசுகிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம். படப்பிடிப்பும், பயணங்களுமாக இருந்தவரை ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம்.

பி.சி.ஸ்ரீராமை சந்தித்ததும் உங்களை உதவியாளராக சேர்த்துக்கொண்டாரா?

நண்பர் ஒருவர் பி.சி.ஸ்ரீராமை பேட்டி எடுக்க சென்றபோது, அவரோடு நானும் சேர்ந்து அவர் வீட்டுக்கு போய்விட்டேன். தெர்மாகோலை கையில் வைத்துக்கொண்டு அவர் வீட்டில் இங்கும் அங்கும் ஓடி வந்தேன். அவர் என்னை அழைத்து, ‘நீ என்ன வேலை பார்க்கிறாய்?’ என்று கேட்டார். உங்களிடம், சேர்வதற்காகத்தான் ஊரை விட்டு ஓடிவந்தேன் என்று சொன்னேன். ‘எட்டு பேருக்கு மேல இருக்காங்க. பார்க்கலாம்!’ என்று சொன்னதோடு முடித்துக்கொண்டார். பின் எதுவுமே பேசவில்லை. அவருடைய அம்மாவிடம் சென்று அவரோட ஒரு புகைப்படத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டேன். கொஞ்ச நாட்களுக்கு பின், அவரை ஓவியமான வரைந்து அனுப்பி வைத்தேன். என்னை, அவரிடம் உதவியாளனாக சேர்ந்துக்கொள்ள வைத்த புகைப்படமும் அதுதான்!

உங்கள் முதல் படமே கமல் தயாரிப்பில்? எப்படி?

அதற்கும் பி.சி.ஸ்ரீராம்தான் காரணம். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. இன்னொரு படம் உங்களிடம் வேலை பார்க்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை வந்ததும் ஊருக்கு கிளம்பிவிட்டேன். அங்கு இருந்தபோதுதான் கமலின் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. நேரில் வந்து கமலிடம், ‘இன்னொரு படத்தில் வேலை பார்க்க வேண்டும்’ என்ற எண்ணத்தை சொன்னேன். அவரோ, "பி.சி.ஸ்ரீராம் சொல்லியிருக்கார். ஒண்ணும் பிரச்சினை இல்லை. நீங்கதான், நம்ம கம்பெனி தயாரிக்கிற, ‘லேடிஸ் ஒன்லி’ ஹிந்தி படத்தோட கேமராமேன்!" என்றார். அப்படித்தான் ஸ்ரீராம் எனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார்.

புதிதாக வரும் ஒளிப்பதிவாளர்கள் எப்படி இருக்கிறார்கள்?

மனோஜ் பரமஹம்சா, ‘விண்மீன்கள்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த், அபிநந்தன் போன்ற ஒளிப்பதிவாளர்கள் நல்லாவே பண்றாங்க. இயக்குநர்களோடு சேர்ந்து நல்ல அலைவரிசையோடு பணியாற்றும்போது நல்ல வெற்றி கண்டிப்பா கிடைக்கும். இவர்களின் வெற்றியும் அப்படித்தான் என்று எனக்குப்படுகிறது. என்னோட உதவியாளர்கள் கோபி, முருகன், தாஜ் ஆகிய 3 பேர் ஒளிப்பதிவாளர்களாக ஆகியிருக்கிறார்கள். அடுத்து விஷ்ணு. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து வர இருக்கிறார்கள். பி.சி ஸ்ரீராம்கிட்ட இருந்து வந்த 25 வது ஆளாக, நான் இருக்கிறேன். இப்போது என்னிடம் இருந்தும் 3, 4 பேர் வந்துவிட்டார்கள்.

உங்க காதல் மனைவி இ.மாலாவும் ஊடகத்துறை சார்ந்தவங்களாச்சே. உங்களை, குடும்பத்தை கவனிக்க அவரால் நேரம் ஒதுக்க முடிகிறதா?

திரைத்துறை மீதான காதலோடு திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் படித்தபோது எவ்வளவு சுதந்திரத்தோடு இருந்தேனோ, அதே சுதந்திரத்தோடு இப்போதும் இருக்கிறேன். அதற்கு முழு காரணம் என் மனைவி மாலாதான். வீட்டின் சுமை என் மீது சிறிதும் படாமல் குடும்ப வேலைகளை கவனித்துக்கொள்வதோடு, ஹாலிவுட், பாலிவுட்டிலும்கூட ஒரு நல்ல படம் வெளிவந்திருக்கிறது என்றால் அதைப்பற்றிய செய்தியை எல்லாம் சேகரித்து, உடனே பார்க்க சொல்வார். ஒரு கலைஞனுக்கு இது ரொம்பவே முக்கியமானதாக படும். எனக்கும் அப்படித்தான்.

அடுத்து?

‘இது கதிர்வேலன் காதல்’ படம் முடியும் தறுவாயில் இருக்கிறது. இயக்குநர் பிரபாகரனிடம் இருந்து வித்தியாசமான மற்றொரு படம். குடும்ப பின்னணிப் படம். உதய் ரொம்பவே ஸ்மார்ட்டா கலக்கியிருக்கார். ஒரு குடும்பப் பெண்ணாக நயன்தாராவை ரசிகர்கள் ரொம்பவே ரசிப்பாங்க. அடுத்து, இப்போ சிம்பு நடிப்பில், பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். இதைத்தவிர, அடுத்தடுத்த 2 படங்களும் ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

SCROLL FOR NEXT