தமிழ் சினிமா

வீரம் - தி இந்து விமர்சனம்

இந்து டாக்கீஸ் குழு

பொங்கல் திருவிழா, பொய்க்கால் குதிரைகள், பறையடி முழக்கம், பரவை முனியம்மாவின் பாட்டு, என அசல் தமிழ்க் கிராம வாசனை. வெள்ளை வேட்டி, வீச்சருவா, ஆட்டம்பாட்டம், அடிதடி என வீரமுள்ள இளைஞனாக அஜித். அழகு தேவதையாக தமன்னா. சிரிக்க வைக்க சந்தானம். வீரம், கச்சிதமான மசாலா பொங்கல்.

அஜித்துக்கு நான்கு தம்பிகள். சந்தானம் உடன் பிறவாத தம்பி. ஒற்றுமை பாதிக்கப்படும் என சகோதரர்கள் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்கள். கல்யாணம் என்று பேச்செடுப்பவர்களை வெளுத்துக்கட்டுகிறார் அஜித். ஆனால் தம்பிகளுக்குக் காதல் வருகிறது.

தம்பிகளுடன் சேர்ந்து அஜித்திற்குக் கல்யாணம் செய்துவைக்க சந்தானம் திட்டம் போடுகிறார். அதற்கேற்ப ‘கோப்பெரும் தேவி’யாக வந்து சேர்கிறார் தமன்னா. ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்...’ பாடல் பின்னணியில் இசைக்க குத்துவிளக்கைக் கையில் ஏந்தி வருகிறார்.

தமன்னா அமைதிப் புறா. ஆனால் அஜித்தோ அடிதடி மன்னன். இவர்களை இணைத்து வைக்க சந்தானம் தம்பிகளுடன் திட்டங்கள் வகுக்கிறார். அஜித்தை அமைதியானவராகவும் பிராணிகளுடன் சிநேகம் உடையவராகவும் காட்டுகிறார்கள். முதல் பாதியில் சந்தானத்தின் கொடி பறக்கிறது.

வில்லன் போல் அறிமுகமாகும் ப்ரதீப் ராவத் பிற்பாதியில் வேடிக்கைப் பொருளாக ஆகிறார்.

முதல் பாதி காதலும் நகைச்சுவையுமாக முடிய, பிற்பாதி அதிரடி சண்டையுடன் தொடங்குகிறது. தமன்னாவின் அப்பா நாசருக்கு அடிதடி சண்டை பிடிக்காது. தன் மகளையும் அடிதடிக்குப் போகாத ஒருவனுக்கு கட்டிவைக்கவே விரும்புகிறார். அஜித் அடிதடிகளையெல்லாம் விட்டுவிட்டு தமன்னா வீட்டிற்குத் தம்பிகளுடன் வருகிறார். ஆனால் சண்டை அவரை விடுவதாக இல்லை. கடைசியில் என்ன நடக்கிறது?

அடிதடி, சண்டை, காதல், இரட்டை அர்த்த வசனங்கள், உணர்ச்சி எல்லாம் வழக்கம்போல் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் சரியாகக் கலந்து வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா. அஜித்தை, இயக்குநர் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அஜித் அளவாகவே பேசுகிறார். அஜித்திடம், தம்பிகள் தங்களுடைய காதலை சொல்லும் இடம் ரசனை.

பல காட்சிகள் லாஜிக்கை மீறுகின்றன. சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் சாதுவானவர்களின் நரம்பையும் புடைக்கச் செய்கின்றன. இசை தேவி பிரசாத். கிராமியச் சாயல் கொண்ட பாடல்கள் தாளம் போட வைக்கின்றன . வெற்றியின் ஒளிப்பதிவு உறுத்தாத வகையில் இணைந்து வருகிறது. பரதனின் வசனங்களுக்கு அரங்கில் நல்ல வரவேற்பு.

பழைய அஜித்தை இரண்டாம் பாதியில் பார்க்கலாம். தலை நரைத்தாலும் ‘தல’ ஜொலிக்கிறார். சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். தமன்னா எப்போதும் கோயில் சிலைகளைத் துடைத்துக்கொண்டே இருக்கிறார். தொல்பொருள் ஆய்வாளராம்.

ஆங்காங்கே சில அபத்தங்கள் இருந்தாலும் படம் வேகமாக ஓடுகிறது. மசாலா படப் பிரியர் களைக் குறிவைத்திருக்கும் இப்படத்தில் கலவை சரியாக உள்ளதால் பார்வையாளர்களைக் கவர்கிறது. கிளைமேக்ஸை வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.

வீரத்துக்கு ஒரு முறை விஜயம் செய்யலாம்.

SCROLL FOR NEXT