‘8 தோட்டாக்கள்' படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அனைத்துத் தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். “படம் பார்த்தீங்களா… நல்லாயிருந்ததா? நான் இன்னும் திரையரங்கில் போய் ‘8 தோட்டாக்கள்' பார்க்கவில்லை. விரைவில் போய் ரசிகர்களோடு உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. சீக்கிரம் போகணும்” என்று நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார் எம்.எஸ்.பாஸ்கர்.
‘8 தோட்டாக்கள்' படத்தின் கதை யைக் கேட்டவுடன் என்ன நினைத்தீர்கள்?
இயக்குநர் ஸ்ரீகணேஷ் வீட்டுக்கு வந்தவுடனே, நான் உங்களை அப்பா என்று அழைக்கலாமா என்றுதான் கேட்டார். தாராளமாக என்றேன். முழுக் கதையையும் கேட்டவுடன் ‘சாது மிரண்டால்' என்ற வார்த்தை மட்டும் ஞாபகம் வந்தது. சமூகத்தில் எனது கதாபாத்திரம் போன்று பலரும் மனதுக்குள் புழுங்கிக் கொண் டிருக்கிறார்கள். சினிமா என்ப தால் மட்டுமே வெளியே காட்டி விட்டோம்.
மூர்த்தி என்கிற பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், அப்படி ஒரு முடிவுக்குத்தான் போகும் என்பதை இயக்குநர் சொன்னவுடன், நான் என் கேரக்டரைப் பற்றி உணர்ந்து கொண்டேன். இதுவரைக்கும் இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை செய்ததே இல்லை. கண்டிப்பாகச் செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். அந்த இயக்குநரும் “அப்பா, நான் எழுதும்போதே உங்கள் பெயர் போட்டுத்தான் எழுதினேன் பாருங்கள்” என்று காட்டினார்.
மூர்த்தி கதாபாத்திரத்துக்கு உங் களுக்குக் கிடைத்த பாராட்டுகள் பற்றி..?
நிறையப் பேர் போன் செய்தார்கள். ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா அண்ணன், உதயநிதி ஸ்டாலின் சார் உள்ளிட்ட பலரும் திரையுலகில் இருந்து போனில் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இறுதியில் வரும் நீளமான வசனக் காட்சிக்கு மிகவும் சிரமப்பட்டீர்களா?
அரை மணி நேரத்தில் படமாக் கப்பட்ட காட்சி அது. நீளமான வசனம், கட் பண்ணி எடுக்க வேண்டாம், ஒரே டேக்காகப் போய்விடலாம் என்றேன். ஒரே டேக்கில் ஓ.கே செய்துவிட்டேன். அக்காட்சியில் இடையில் அழுதது கூடக் கிளசரின் போடாமல் அழுதது தான்.
முழுக்க நாயகர்களின் பின்னணி யில் தமிழ் சினிமா சென்றுவிட்டது. இன்றைய தமிழ் சினிமாவில் குணச் சித்திரக் கதாபாத்திரங்களுக்கு முக் கியத்துவம் இல்லை என நினைக் கிறீர்களா?
காலங்கள் மாறினாலும் நல்ல ஒரு நடிப்பு, படம், காட்சி அனைத்தின் மூலமாகவும் ரசிகர்களைக் கட்டிப் போட முடியும். அதில் மாற்றமில்லை. 'மகாநதி' படத்தில் கமல் அண்ணா அவருடைய மகளைப் பார்த்து அழும் காட்சியைப் பார்த்துவிட்டு, என் மகள் மீது இன்னும் கூடுதல் அக்கறையும் பாசமும் வந்தது. மசாலா படங்களை ரசிப்பதற்கு என்று சிலர் இருக்கிறார்கள். இதுபோன்ற படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவரது படத் திலும் நடித்துள்ளீர்கள். ஆனால் ‘8 தோட்டாக்கள்' கதாபாத்திரம் போன்று நமக்கு அமையவில்லை என்ற வருத்தம் உள்ளதா?
‘8 தோட்டாக்கள்' மாறுபட்ட மிக அருமையான கதாபாத்திரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு முன்பு யாரும் அளிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ‘மொழி', ‘பயணம்', ‘அரிமா நம்பி', ‘பாபநாசம்', ‘அழகுராஜா', ‘அழகிய தீயே' போன்ற பல படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன.
இப்போது கூட ராதா மோகன் சார் ‘பிருந்தாவனம்' படத்தில் ஒரு காட்சியைப் படமாக்கியுள்ளார். நான் சிரித்துக்கொண்டே ஒரு வச னம் பேசியிருப்பேன். ஆனால், பார்ப்பவர்கள் கண்கள் கண்டிப்பாகக் கலங்கும்.
‘8 தோட்டாக்கள்' படத்துக்கு முன் பும் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் என்னை ஒரு பெரிய இடத்துக்குக் கொண்டுபோயுள்ளது என்று சொல் வேன். இதற்குப் பிறகு மூர்த்தி மாதிரி யான கதாபாத்திரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இனிமேல், ரொம்ப ஜாக்கிரதையாகப் படங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
டப்பிங் கலைஞராகத்தான் உங் களுடைய திரையுலகப் பயணம் தொடங்கியது. இப்போதும் டப்பிங் பேசி வருகிறீர்களா?
எனது பழைய தொழிலான டப்பிங்கை எப்போதும் விட மாட்டேன். முதலில் ‘சிட்டுக்குருவி' என்ற படத்தில்தான் ஒரே ஒரு வசனத்துக்கு டப்பிங் பேசினேன். எந்தவிதப் பயிற்சியுமின்றி ஒரே டேக்கில் பேசினேன். அது அப்படியே பழக்கமாகி டப்பிங் கலைஞராக வளர்ந்தேன்.
டப்பிங் படங்களில்தான் எனக்கு முதன்முதலில் பெரிய கதாபாத்திரங் களுக்குப் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழில் விசு அண்ணா நிறைய வாய்ப்பு கொடுத்தார். இதுவரை 1,300 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருப்பேன்.