காதலுக்கு அப்பாலும் இளைஞர்களுக்கு வாழ்க்கை இருக்கிறது என, இளைய உலகின் சொல்லப்படாத பக்கங்களை கவலையுடன் காட்சிப்படுத்தி வருபவர் சமுத்திரக்கனி. தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று இவரைச் சொல்லலாம். ஜெயம்ரவி - அமலாபால் நடிக்க ‘ நிமிர்ந்து நில்’ என்ற படத்தை இயக்கிவரும் சமுத்திரக்கனியை சந்தித்துப் பேசினோம்.
முதல் படத்தில் ஆரம்பித்து இளைஞர்களை மையப்படுத்தியே உங்கள் படங்கள் இருக்க என்ன காரணம்?
“உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ‘யூனெஸ்கோ’ கூறியிருக்கிறது. நம் தேசத்தின் மக்கள் தொகையில் 60% சதவிகிதம் பேர் இளைஞர்கள். அவர்களுக்கு இருக்கிற பிரச்சனைகளும் தேவைப்படுகிற வழிகாட்டுதல்களும் அதிகம். இவர்கள்தான் நாளைய தேசத்தைக் கட்டமைக்கப் போகிற சக்தி. இவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டுமென்றால் அவர்களை சுத்தியிருக்கிற பிரச்சனைகளும் , உலகமும் விமர்சிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் கண்டுகொள்ளப் பட்டால்தான் ஒரு தேசம் வாழும். இது ஆட்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல... என்னைப்போல் காட்சி செய்பவர்களும் கண்டுகொள்ள வேண்டிய உலகம்.”
நிமிர்ந்து நில் என்ற தலைப்பே பளிச்சென்று ஏதோ சொல்ல வருகிறதே?
“இன்றைய இளைஞர்களிடம் இல்லாத திறமைகளே இல்லை! எந்த இளைஞனும் முட்டாள் அல்ல. சிலையும் நீதான், சிற்பியும் நீதான் என்று இளைஞர்களைப் பார்த்து சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது. நம் வீட்டுப் பிள்ளை மட்டும் நன்றாக வளர்ந்தால் போதுமென்ற மனநிலை இங்கே போதாது. இன்னொருவனை வளர்ப்பதிலும் நமக்கு பொறுப்பு இருப்பதை சொல்லாமல் சொல்லும் படம் இது !”
ஜெயம்ரவி என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் வருகிறார்?
“இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார். ஒருவர் அரவிந்த் சிவசாமி. 100% சதவிகிதம் நல்லவனாக வருகிறார். சமூகத்தில் நல்லவனாக மட்டுமே வாழ நினைக்கும் ஒருவனை இந்த சமூகம் அப்படி வாழ விடாமல் எப்படியெல்லாம் துரத்துகிறது, எப்படியெல்லாம் அவனைச் சீண்டுகிறது, அதிலிருந்து அவனால் மீள முடிந்ததா என்பதுதான் அவரது கதாபாத்திரத்தின் சவால். இரண்டாவது கதாபாத்திரம் பற்றி இப்போது வெளிப்படுத்தினால் கதையை சொல்வதாக ஆகிவிடும்.”
முதல் முறையாக ஜி.வி.பிரகாஷூடன் இணைந்திருக்கிறீர்கள்?
“ஆமாம்! திறமைகளின் கொள்ளிடம் ஜி.வி.பிரகாஷ். கதைக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் தாம் தூம் என்ற இசையை எதிர்பார்க்க முடியாது. இந்தப் படத்தின் தமிழ்ப்பதிப்பில் ஒரு தெலுங்குப் பாடலும், தெலுங்குப் பதிப்பில் ஒரு தமிழ்ப்பாடலும் இடம்பெறுகிறது. இதுதவிர “இந்த உலகத்தில் நீ நீயாக இருக்க போர் புரிந்தே ஆக வேண்டும்!” என்ற பகவத் கீதையின் ஸ்லோகத்தை அப்படியே தீம் பாடலாக மெட்டமைத்திருக்கிறார்.”
உங்கள் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் அமலா பால் பாத்திரத்துக்கு அந்த முக்கியத்துவம் உண்டா?
“கண்டிப்பாக! அமலா பால், பூமாரி என்கிற பாத்திரத்தில் வருகிறார். பெண் என்பவள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே போய் வீடு திரும்புவது வரை எவ்வளவு பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. எத்தனை போலியாக சிரிக்க வேண்டியிருக்கிறது என்ற யதார்த்தத்தை பிரதிபலிக்கிற கேரக்டர்.”
படத்தில் சரத்குமாரும், நீயா நானா கோபிநாத்தும் இருக்கிறார்களே?
“ஆமாம்! சரத் சி.பி. ஐ.அதிகாரியாக வருகிறார். சரத்தின் கம்பீரமும் தோரணையும் அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்கும். அவர் வருகிற 20 நிமிடங்களும் அவர்தான் நாயகனாக தெரிவார். கோபிநாத் கோபிநாத்தாகவே வருகிறார். “