'தாமிரபரணி' படத்தினைத் தொடர்ந்து விஷால் - ஹரி இணையும் படத்திற்கு 'பூஜை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளிவர இருக்கிறது. அன்றையே தினமே 'பூஜை' படத்தின் பூஜை நடைபெற இருக்கிறது. இப்படத்தினையும் விஷாலே தயாரிக்க இருக்கிறார்.
விஷாலுக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, முகேஷ் திவாரி, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், ஆர்.சுந்தரராஜன், அபிநயா, சித்தாரா, கெளசல்யா, ரேணுகா, ஐஸ்வர்யா, ஜானகி சபேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார். '3' படத்தினைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கும் தமிழ் படம் இது.
'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தினைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் இருந்து விலகியிருந்த கெளசல்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஹரி, "சாமிக்கு மட்டுமல்ல, ஆயுதங்களுக்கும் பூஜை போடலாம் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ‘தாமிரபரணி’ படத்துக்குப் பிறகு விஷாலுடன் மீண்டும் இணைகிறேன். இந்தப் படம் அவருக்கு வேறொரு இடத்தை தரும். ஸ்ருதிஹாசன் ஸ்டைலான, மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்." என்று கூறியுள்ளார்.