தமிழ் சினிமா

மீண்டும் ரஞ்சித் - ரஜினி இணையும் காலா

ஸ்கிரீனன்

மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. தனுஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மும்பை தாராவி பகுதிகளை அரங்குகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹியூமா குரேஷி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து மே 25ம் தேதி காலை 10 மணிக்கு அறிவிப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் உற்சாகமானார்கள்.

அதன்படி இன்று (மே 25) காலை 10 மணிக்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'காலா’ என்ற தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். படத்தலைப்புக்கு கீழே 'கரிகாலன்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT