'காலா' படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்து வருகிறார் நானா படேகர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது முதற்கட்ட படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.
இம்மாத இறுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் மும்பைக்கு பயணமாகவுள்ளார் ரஜினி. ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வருகிறார்கள்.
"சட்டவிரோத, தீங்கான செயல்களில் ஈடுபடும் ஈவு இரக்கமற்ற அரசியல்வாதியாக நடிக்கும் நானா படேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நேருக்கு நேர் மோதுகிறார். மிகவும் வலுவான கதாபாத்திரமாகும் இது, ரஜினிக்கும் நானா படேகருக்கும் இடையே நடக்கும் மோதலை ரசிகர்கள் நிச்சயம் ஆரவாரமாக ரசிப்பார்கள்" என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
மேலும், நானா படேகர் நடத்தும் கட்சியிடம் மும்பையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைக் கேட்டு போராடுவது போன்று ரஜினிக்கு காட்சியமைத்துள்ளார் இயக்குநர் ரஞ்சித். தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.