'A' சான்றிதழ் தருவதென்றால், எதற்கு எல்லாம் கொடுப்பார்கள் என்பதை தணிக்கைக் குழு மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என 'மெட்ரோ' இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் காட்டமாக தெரிவித்தார்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன், நிஷாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஜெயகிருஷ்ணன் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் இப்படத்தை ஜூன் 24ம் தேதி வெளியிடவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தனது படத்துக்கு தணிக்கைக் குழு எந்த வகையில் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள், எப்படி தணிக்கை செய்யப்பட்டது, தணிக்கையில் என்ன பிரச்சினை ஏற்பட்டது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெரிவித்தார்.
தணிக்கை சர்ச்சை குறித்து இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பேசியது:
"'மெட்ரோ'வில் 2 சண்டைக்காட்சிகள் இருக்கிறது. ஒன்று கொஞ்சம் பெரியது. நீங்கள் இதற்கு முன்பு பார்த்த படங்களின் சண்டைக்காட்சிகளில் இருந்த வன்முறையை மிஞ்சும் அளவுக்கு இருக்காது. இப்படத்தில் இருக்கும் வன்முறையை நான் புகுத்தவில்லை. தீயதை அழிப்பதற்கு மட்டுமே வன்முறையை பயன்படுத்தி இருக்கிறேன். செயின் பறிப்பு சம்பவங்கள் என்பது படத்தில் ஒரு பகுதி தான். படத்தின் கதை அது கிடையாது, முற்றிலும் மாறுபட்டது.
ஏப்ரல் 1ம் தேதி இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தார்கள். ஏப்ரல் 1ம் தேதி அனைவருமே மற்றவர்களை ஏமாற்றுவார்கள். ஆனால், அன்றைய தினம் உண்மையில் என்னை தணிக்கைக் குழு ஏமாற்றிவிட்டது. இப்படத்தின் கதைக்களத்திற்கு 'U' கிடைக்காது. 'U/A' அல்லது 'A' கிடைக்கும் என்று படத்தின் ஆரம்பப் புள்ளியிலேயே தெரியும். அதனால் தான் முதலிலேயே 'மெட்ரோ' என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தேன். ஆனால், தணிக்கை கொடுக்க மறுப்பார்கள் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
தணிக்கை குழுவுடன் மீட்டிங் முடிந்து அழுது கொண்டுதான் வெளியே வந்தேன். செயின் அடிக்க சொல்லி தருகிறீர்கள் என்று பல்வேறு காரணங்கள் சொன்னார்கள். ஒரு படத்தில் எந்தவொரு பாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், அதனுடைய பின்புலத்தை தெளிவாக சொல்ல வேண்டும். கதையை நகர்த்துவதற்கு செயின் பறிப்பை உபயோகப்படுத்தி இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, செயின் பறிப்பு எப்படி நடக்கிறது, எதற்காக நடக்கிறது, அதை பண்ணுபவர்களின் மனநிலை என்ன, அவர்கள் எப்படி திட்டமிடுவார்கள் போன்ற காட்சிகளை எல்லாம் வைத்தால் மட்டுமே அவர்கள் எவ்வளவு தைரியமாக பண்ணுகிறார்கள் என்பதை சொல்ல முடியும். அதை நான் வெறும் செயின் பறிப்பு என்று காட்டிவிட்டு போனால், ஏன், எதற்காக போன்ற கேள்விகள் எழும். அதற்கு YOUTUBE வீடியோக்களே நிறைய இருக்கிறது. இப்படத்தை பார்க்கும் போது, நாம் வெளியே போகும் போது எவ்வளவு பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு வரும்.
இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர். அதனால் நான் க்ரைம் மற்றும் த்ரில்லர் இரண்டையும் தெளிவாக காட்டாமல் படம் எடுக்க முடியாது. இப்படத்தில் வன்முறை இல்லை என நான் சொல்லவில்லை. வன்முறை இருக்கிறது அதை தீயவை அழிப்பதற்கு மட்டுமே. அதனால் தான் தணிக்கைக் குழு சொன்னதை ஏற்றுக் கொண்டு மறுதணிக்கைக்கு சென்றோம். அவர்கள் படம் பார்ப்பதற்கு 50 நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. 50 நாட்கள் நான் எப்படி இருந்தேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
மறுதணிக்கையில் கங்கை அமரன் சார் படம் பார்த்தார். சினிமாவில் நீண்ட நாட்கள் இருந்ததால், அவருக்கு இப்படம் பற்றி புரிந்துவிட்டது. 'U/A' சான்றிதழ் எதிர்பார்த்தேன். ஏனென்றால் 15 - 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் மனதில் வைத்து தான் எடுத்தேன். "படத்தைக் காப்பாற்றி கொள்ளுங்கள்" என 'A' சான்றிதழ் கொடுத்தார். 'U/A' வேண்டும் என்றவுடன் பாதி படம் தான் கிடைக்கும் என்றார். சரி என்று வந்துவிட்டேன். இங்கிருக்கும் தணிக்கைக் குழுவை பார்க்கும்போது மும்பை தணிக்கைக் குழு ஒ.கே தான் என்று தோன்றுகிறது.
ஒருவேளை இப்படம் முடியும் போது செயின் பறிப்பு எல்லாம் சரி என்று முடித்திருந்தால் தப்பான முடிவாகத் தான் இருந்திருக்கும். கெட்டதும் சொல்லலாம், நல்லதும் சொல்லலாம் முடிவு என்னவாக இருக்கிறது என்பது ரொம்ப முக்கியம். இப்படம் ரொம்ப நல்லபடியாக முடியும். இது யாரையும் பாதிக்காது என்பது என் கருத்து. இப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் குற்றங்கள் யாவும் மெட்ரோ நகரங்களில் அதிகமாக நடக்கும். அதனால் தான் 'மெட்ரோ' என பெயரிட்டேன்.
இப்படத்துக்கு தணிக்கை மறுக்கப்பட்ட போது, அவர்களுடன் சண்டையிடுவதற்கு எல்லாம் நான் தயாராக இல்லை. அவர்களுடைய வழிமுறைகளின்படி தான் நடந்து கொண்டோம். 4 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று இருந்தேன். அங்கு ஒருவர் "என்ன படத்துக்கு 'A' சான்றிதழாமே, படத்தில் எத்தனை பிட்டு இருக்கிறது?" என்று கேட்டார். இப்படிப்பட்ட கண்ணோட்டங்கள் தான் பிரச்சினை. மக்களைப் பொறுத்தவரை கதை ரொம்ப வலுவானது, வன்முறை இருக்கிறது என்றால் கூட 'A' சான்றிதழ் எனும் போது அவர்களைப் பொறுத்தவரை பிட்டு படம் தான். இதனை சொல்ல வேண்டியது என்னுடைய வேலை கூடாது, தணிக்கைக் குழுவினுடைய வேலை. போஸ்டரில் 'A' சான்றிதழ் என்றாலே பிட்டு இருக்கிறது என்கிறார்கள். அது தான் கஷ்டமாக இருக்கிறது. அதுக்கு நான் படத்தில் 4 பிட்டு வைத்திருக்கலாம். இதைப் போய் நான் ஒவ்வொருத்தரிடமும் சொல்ல முடியாது. 'A' என்றால் எதற்கு எல்லாம் கொடுப்பார்கள் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.
மறுதணிக்கைக்கு சென்ற படம் எந்த ஒரு இடத்திலும் கட் இல்லாமல் வருகிறது. மறுதணிக்கை அதிகாரிகள் படம் பார்க்கும் போது தணிக்கை அதிகாரியும் வந்திருந்தார். அவர் எப்படி வந்து உட்காரலாம்? இதை நான் தைரியமாக சொல்கிறேன் என்றால் இன்னும் நான் தொலைக்காட்சி தணிக்கைக்கு விண்ணப்பிக்கவே இல்லை. இதற்கு பிறகு கூட நிறைய பிரச்சினைகள் வரலாம். எனக்கு வேறு என்ன வழி என்று தெரியவில்லை" என்று இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் உருக்கமாக பேசினார்.