தமிழ் சினிமா

நான்லீனியர்: விஷால், ரஜினியின் கவலையும் திரை விமர்சனச் சூழலும்!

சரா

"பத்திரிகையாளர்கள் தயவுசெய்து திரைப்பட விமர்சனங்களை 3 நாட்கள் கழித்துப் போடுங்கள். ஒரு படத்தின் 3 காட்சிகள் முடிவதற்குள், பட விமர்சனம் வந்து விடுகிறது. சில பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளத்தில் படங்களை கிழித்தெறிகிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதை 3 நாட்கள் கழித்துச் செய்யுங்கள்."

- விஷால், நடிகர் - தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

"விஷால் முன்வைத்தது ஒரு நல்ல கோரிக்கை. அதை நான் ஆமோதிக்கிறேன். விமர்சனம் பண்ணுங்கள். ஆனால், அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள்."

- நடிகர் ரஜினிகாந்த்

"உடனே விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ரொம்ப வலிக்குது சார்!"

- நடிகர் லாரன்ஸ்

இம்மூவரின் கோரிக்கைகளுக்கும் ஆதங்கத்துக்கும் காரணம், பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதள கருத்துகளால் புதிதாக வெளியாகும் படங்களின் வசூல் பாதிக்கிறது என்பது தெளிவு.

ஒரு படம் வெளியாவதற்கு முதல் நாளோ அல்லது வெளியீட்டு நாளிலோ விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்புத் திரையிடல்களை படத் தயாரிப்பு நிறுவனங்களே ஏற்பாடு செய்கின்றன. அதாவது, படம் வெளியாகும் அன்றைய தினத்திலேயே விமர்சனம் வெளியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. தங்கள் படைப்பின் மீது நம்பிக்கை வைத்து, அதன் விமர்சனம் மூலம் மக்களை சென்றடைய வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், இப்போது மூன்று நாட்கள் கழித்து விமர்சியுங்கள் என்றால், தங்கள் படைப்பு மீது தங்களுக்கே நம்பிக்கை இல்லை என்று வைத்துக்கொள்ளலாமா?

கலை ரீதியில் மிகச் சிறந்தது என பத்திரிகைகளால் கொண்டாடப்பட்ட சில படங்கள் வர்த்தகத்தில் இழப்பைச் சந்தித்துள்ளது போலவே, பத்திரிகை விமர்சனங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பல படங்கள் மலிவான பொழுதுபோக்கு அம்சங்களால் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதும் இங்கே நடக்கிறது.

ஒரு நியூஸ் பிரேக் ஆவதற்குள், அது குறித்த கருத்துகளும் பார்வைகளும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் இந்தக் காலக்கட்டத்தில் பத்திரிகை விமர்சனங்களால் வர்த்தக பாதிப்பு ஏற்படுகிறது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. சரி, இந்த நட்சத்திரங்களின் கவலை எல்லாம் இணையத்தில், குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களும் கருத்துகளுமா என்று எடுத்துக்கொண்டாலும் கூட, இவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறதா என்றால், 'இல்லை' என்றே அறிய முடிகிறது.

இணைய விமர்சனங்கள்

இணையத்தில் தொடர்ச்சியாக 'விமர்சனங்கள்' என்ற பெயரில் இயங்கி வருபவர்களின் எண்ணிக்கை இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, யூடியூப் சேனல்களில் சிலரது விமர்சனங்களும், சினிமா செய்திகள் சார்ந்த வலைதளங்களிலும் வெளிவரும் விமர்சனங்களுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரவேற்பு மிகுதியாக இருப்பதை காணலாம். விரல்விட்டு எண்ணக் கூடிய இவர்களின் வளர்ச்சியில் துறை சார்ந்த திறன்கள் என்பது இரண்டாவது பட்சம்தான். ஆரம்ப காலத்திலேயே இணையத்தில் கர்ச்சீஃப் போட்டு விட்டதால், இணையத்துக்கே உரிய அல்கரிதத்தின் அடிப்படையில் இவர்களுக்கு அதிக பார்வையாளர்கள் எளிதில் கிடைத்துவிடுகிறார்கள்.

தமிழகத்தில் நாள்தோறும் புதிதாக ஆயிரக்கணக்கானோர் இணையத்தை நாடுகின்றனர். அவர்கள் கூகுள் வழி தேடும்போது இவர்களது தளங்கள்தான் முதலில் கிட்டும். மேலும், படத்தைப் பார்ப்பதற்கு முன்பு விமர்சனங்களைப் பார்ப்பதை - படிப்பதை விட, படத்தைப் பார்த்துவிட்டு இவர்களை நாடுவோர் தான் அதிகம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் புரொஃபஷனலாக விமர்சனம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் கவனத்துக்கு உரியவர்களாக மாறுகின்றனர்.

அதேபோல், சினிமா செய்திகள் சார்ந்த வலைதளங்களில் வெளியாகும் சினிமா விமர்சனங்கள் பொறுத்தவரை, ஒரு படம் பாராட்டைப் பெறவோ அல்லது எதிர்மறை விமர்சனங்கள் பெறவோ சம்பந்தப்பட்ட படங்களின் நிறுவனங்களின் நேரடி 'கவனிப்பு'ம், விளம்பரங்களைக் கட்டாயமாக தருவதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைத் தவிர, சினிமா பத்திரிகை சார்ந்து இயங்குவோரின் அதிகாரபூர்வமற்ற கூட்டமைப்புகள் சேர்ந்து, தங்களது கவனிப்புக்கு ஏற்ப ஒரு படத்தைப் புகழ்ந்து தள்ளுவதும், ஒரு படத்தைப் பற்றி கருத்து தெரிவிக்காமல் தவிர்த்துவிடுவதும் ட்விட்டரில் நடந்தேறுவதையும் அறிய முடிகிறது.

எல்லா இடத்திலும் நேர்மையானவர்கள் அரிதாக இருப்பது போலவே இணையத்திலும் விமர்சனம் எழுதுவதில் உண்மையானவர்கள் இருக்கின்றனர். அவர்களை நெட்டிசன்களை சரியாக அடையாளம் கண்டு பின்தொடர்வதும், புதிதாக இணையத்துக்கு வருவோர் சற்றே தாமதாக அறிந்துகொண்டு பின்தொடர்வதும் நடக்கிறது என்பதும் பதியத்தக்கது.

எனவே, இணையத்தில் தொழில்முறையாக வெளியாகும் விமர்சனங்களை அணுகும் முறையை 'கவனிப்பு' விஷயத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை விஷாலும் ரஜினியும் முதலில் உணரவேண்டும்.

சமூக வலைதள கருத்துகள்

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் தொடர்பான கருத்துகளை உடனுக்குடன் பதியும் நெட்டிசன்கள் பல வகை உண்டு. அவற்றில் சில:

> திரையரங்குகளில் இருந்தபடி 'வாட்சிங்' ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, முதல் பாதி - இரண்டாம் பாதி எப்படி என்று உடனுக்குடன் கருத்துப் பகிர்ந்துவிட்டு, பின்னர் ஒட்டுமொத்தமாக படம் பிடித்திருந்ததா பிடிக்கவில்லையா என்பதை குறும்பதிவாக வெளியிடுவர்.

> திரையரங்குக்குச் சென்று பார்க்கத்தக்க அளவுக்கு தகுதி வாய்ந்த படமா என்கிற ரீதியில் கருத்துகளைப் பதிவு செய்து, தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களை 'அலெர்ட்' செய்பவர்கள்.

> சமூக வலைதளத்தில் இயங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அரசியல், சமூகக் கருத்துகளை முன்வைப்பதில் தயக்கம். இந்தச் சூழலில் எவ்வித தங்குதடையுமின்றி தங்கள் கருத்துகளை உள்ளது உள்ளபடியே பதிந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு சினிமாவை நாடுதல்.

> வெவ்வேறு துறை சார்ந்து எழுதி வந்தாலும், சினிமா குறித்த எழுத்துக்கு உள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, தங்கள் பக்கத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்கான கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, அதிகம் பேசப்படும் படங்கள் பற்றி எழுதுவது.

> சினிமா எழுத்தின் மீதான ஆர்வத்தால், தங்களைக் கவர்ந்த படங்கள் குறித்து சற்றே விரிவாக பதிவு செய்தல். நல்ல சினிமாவை நண்பர்களுக்கு பரிந்துரைத்தல்.

> கலாய்ப்பிலக்கியத்தில் கரைகண்டவர்களுக்கு தீனி போடும் அம்சங்களைக் கொண்டிருப்பதால், அவர்களால் சினிமா வைத்துச் செய்யப்படுகிறது.

> லைக், கமெண்ட்ஸ் போதை மிகுதியாவதன் காரணமாக, அவை நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதித்தன்மையால் புதிதாக வெளிவரும் படங்கள் குறித்து கருத்துகளை கொட்டித் தீர்த்தல்.

> தாங்கள் விரும்பும் படைப்பாளிகள், நட்சத்திரங்களைக் கொண்டாடும் வகையில் பாராட்டுப் பதிவுகளை இடுதல்.

> தங்களுக்கு வேண்டாத படைப்பாளிகள், நட்சத்திரங்களைக் கழுவியூற்றுவதற்காகவே படங்களைப் பார்த்துவிட்டு, அது எப்படி இருந்தாலும் கவலையின்றி வைத்துச் செய்தல்.

> நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, நாம் தனித்துவிடபடுவோமோ என்ற அச்சத்திலும் திரைப்படம் சார்ந்த பதிவுகளை இடுவதும் உண்டு.

இப்படிப் பல்வேறு காரணப் பின்னணியை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு விஷயத்தை உணர்த்தும் ஒரே விஷயம்: தமிழர்களின் வாழ்க்கையில் சினிமா தவிர்க்க முடியாதது.

தாங்கள் வாசிக்கும் ஒரு புத்தகம் பற்றி பதிவுகள் இடுவதில் ஈடுபாடு காட்டாத இணைய உலகம், ஒரு படத்தைப் பற்றி தவறாமல் பேச முன்வருவதால், அந்த முக்கியத்துவத்தை சினிமா நட்சத்திரங்களும் படைப்பாளிகளும் சாதகமாக பார்க்க வேண்டும்.

கோடி கோடியாகக் கொட்டி மொக்கைப் படங்களை எடுத்தால், அதை நட்சத்திர அந்தஸ்துக்காக ஆராதிக்க நெட்டிசன்கள் தயாராக இல்லை என்பதை இனியாவது உணர வேண்டும். எந்த நட்சத்திரப் பின்னணியும் இல்லாமல், உருப்படியாக எடுக்கப்பட்ட மாநகரம், 8 தோட்டாக்கள் போன்ற படங்களுக்கு வரவேற்பு கிடைக்க வழிவகுத்ததும் இணையம்தான் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

உருப்படியான சினிமாவைக் கொடுப்பதில் கவனம் செலுத்தாமல், மொக்கைப் படங்களைக் கொடுத்து, அது குறித்து கருத்து கூறாமல் கொஞ்சநாள் கண்ணை மூடிக்கொள்ளச் சொல்வது மூடநம்பிக்கை.

இணையத்தில் நெட்டிசன்களால் வெளியிடுபவை அனைத்தும் சினிமா சார்ந்த தங்கள் பார்வையும் கருத்துகளும் தானே தவிர, அவை விமர்சனங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைச் சொல்ல அவர்களுக்கு உரிமை உள்ளது. அதைச் செய்யாதீர்கள் என்று சொல்வதே அபத்தம்.

வேண்டுமென்றால், மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிடம் இப்படி ஒரு கோரிக்கையை முன்வையுங்கள்:

"சினிமா செய்திகளைத் திரட்டும், பேட்டி எடுக்கும் நிருபர்களை ஒரு படம் பார்த்து விமர்சனம் எழுத வைக்காதீர்கள். திரை மொழி குறித்த புரிதல் மிக்க விமர்சகர்களைக் கொண்டு ஒரு படத்தை விமர்சனம் செய்யுங்கள். அப்போதுதான், சரியான விமர்சனங்கள் மக்களைச் சென்றடையும்."

- சரா சுப்ரமணியம், தொடர்புக்கு siravanan@gmail.com

SCROLL FOR NEXT