தமிழ் சினிமா

கவிதைகளும் கடன்களும்: லிங்கூ 2 நூல் வெளியீட்டு விழாவில் லிங்குசாமி நெகிழ்ச்சிப் பேச்சு

ஸ்கிரீனன்

கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன் என்று 'லிங்கூ 2' வெளியீட்டு விழாவில் லிங்குசாமி பேசினார்.

'லிங்கூ' என்ற முதல் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவிதை எழுதுபவராகவும அறியப்பட்டவர் இயக்குநர் லிங்குசாமி. தனது 2வது படைப்பாக 'லிங்கூ 2'வாக 'செல்ஃபி எடுத்துக் கொள்கிறது மரம்' என்று ஹைக்கூ கவிதைகள் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். இத்தொகுப்புக்காக ஓவியங்களை ஸ்ரீதர் வரைந்திருக்கிறார். இதனை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்திருக்கிறது.

'லிங்கூ 2' வெளியீட்டு விழா இயக்குநர் கெளதம் மேனன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், சசி, நந்தா பெரியசாமி, பார்த்திபன், ராஜூமுருகன், விஜய் மில்டன் உள்ளிட்ட பலருடன் எழுத்தாளர் பிருந்தா சாரதி, கவிஞர்கள் அறிவுமதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா, ஜெயபாஸ்கரன், வெண்ணிலா என பலர் கலந்து கொண்டனர். இப்புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிட இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் பார்த்திபன் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது ,'' நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்கிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது என்பேன்.

ஊரிலிருந்து சென்னை வந்த போது ரெண்டு மூணு கவிதைகளும் கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்ள்ளலாம் என்றிருப்பேன். எதுவுமே இல்லைன்னாலும் கவிதை இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன். இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள்.எனக்கென்ன கவலை?

கவிதை சொல்வது என்பது என்னைச் சுற்றித் தொற்று நோய் போல வந்து கொண்டிருக்கிறது. என் டிரைவர் முதல் ஆபீஸ் பாய் வரை இப்போதெல்லாம் கவிதை சொல்கிறார்கள். நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனதோடு இருப்பவன். எவ்வளவு சோதனை வந்தாலும், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், கவிதைகளுக்கு முன்னால் அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும்.எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.

கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குநராக சிரமப்பட்ட காலத்தில் கூட எல்லாக் கடையிலும் கடன் இருக்கும் 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன்.

எங்கள் குடும்பம் ஊர் விட்டு, வேறு ஊர் வந்த போது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது.எனக்குபொறுப்பும் கடமையும் இருக்கிறது.

இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிற போது எனக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. எல்லாக் கஷ்டங்களும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும். இதை என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை.எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன்.அதற்காகவே நானாக ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமே இது" என்றார்.

இயக்குநர்களுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் வேண்டுகோள்

விழாவுக்கு தலைமையேற்று பேசிய கவிக்கோ அப்துல்ரகுமான், "இங்கே இயக்குநர்கள் ,கவிஞர்கள் இருவேறு ரகத்தினராய் காணப்படுபவர்கள் இதன்மூலம் இணைந்திருப்பது நல்ல மாற்றம். கவிஞர்கள் என்பவர்கள் பேனாவால் கவிதை எழுதுகிறவர்கள்.இயக்குநர்கள் என்பவர்கள் கேமராவால் கவிதை எழுதுகிறவர்கள்.அவ்வளவுதான்.

கவிதை என்பதைச் சிந்தித்து எழுதினால் அது கவிதையல்ல. இயல்பாக வரவேண்டும். லிங்குசாமியின் கவிதைகள் இந்நூலில் அப்படித் தானாக வந்தவையாக உள்ளன. படித்துவிட்டு வேறொரு கோணத்தில் எழுதவும் தூண்டுகின்றன. படித்துவிட்டு எழுதவும் தூண்டுவது தான் நல்ல எழுத்து. அந்த வகையில் லிங்குசாமியைப் பாராட்டுகிறேன்.

திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும். தமிழில் சங்க இலக்கியத்தில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும்.அதிலிருந்து காட்சிகளுக்கு நிறைய குறிப்புகள் கிடைக்கும்.

மேலும், இப்போது நீங்கள் பண்ணும் படங்கள் எல்லாம் உங்களுக்காக. அனைவரும் ஒரு படமாவது உலக தரத்தில் தமிழ் சினிமாவை போற்றும் படமாக எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT