தமிழ் சினிமா

அமிதாப் வெளியிடும் கோச்சடையான் இசை

ஸ்கிரீனன்

ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'கோச்சடையான்' படத்தின் இசையை அமிதாப் பச்சன் மார்ச் 9ம் தேதி சென்னையில் வெளியிடுகிறார்.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா, ருக்மணி மற்றும் பலர் நடித்து இருக்கிறார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் இப்படம் முழுவதையும் தயார் செய்து இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. இந்தப் பாடலை எஸ்.பி.பால சுப்ரமணியம் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் சிறப்பு.

அதேபோல ஷோபனாவும், ரஜினியும் இணைந்து நடனமாடும் போட்டிப் பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் சிவசங்கரின் மகன்கள் அஜய், விஜய் இருவரும் நடனம் அமைத்துள்ளனர். இந்த படத்தின் முழுப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

'கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்ள இருக்கிறார்.

அமிதாப் பச்சன் கலந்துக் கொள்ள இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. 'எந்திரன்' இந்தி பதிப்பின் இசையை அமிதாப் பச்சன் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT