மூச்சுத் திணறல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவதால் அவரே தனது உடல்நிலை குறித்து தன்னிலை விளக்கமளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்ற, ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, கமலஹாசனின் மூக்கில் ரப்பர் துண்டு சென்றதால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள விளக்கத்தில், "எனது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், புரளிகளை புறந்தள்ள விளக்கமளிப்பதில் நான் முந்திக்கொளிறேன். நான் நலமாக இருக்கிறேன்.
படப்பிடிப்பின்போது எனக்கு பயங்கர காயம் ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் உண்மையல்ல. ஒப்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட ரப்பர் துண்டு என் நாசி துவாரத்துக்குள் எதிர்பாராமல் சென்றுவிட்டது. அதனை மருத்துவர்கள் உதவியுடன் பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதால் மருத்துவமனைக்குச் சென்றேன்.
சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்த நிலையில், என் முகத்தில் காயம் ஏற்பட்டதுபோல் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. அந்த ஒப்பனையுடனேயே மருத்துவமனைக்குச் சென்றதால் படப்பிடிப்பின்போது எனக்கு காயம் ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. நான் நலமாக உள்ளேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.