திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமீதா, அங்கு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு நமீதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள்.
’ஆமாம்.. ஆர்வமுள்ளது’ என்று பதிலளித்தேன். எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள். ’இப்போதைக்கு சொல்லமுடியாது. இந்த மாதம் இறுதிவரை பொறுத்திருங்கள்.. சொல்கிறேன்’ என்று பதிலளித்தேன்.
ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதே? என்றார்கள்.. ’ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதர்கள் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.’ என்று பதிலளித்தேன். ஆனால் எங்கும் நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போகிறேன் என்றோ அதற்கு தமிழகத்தில் தலைமை தாங்குவேன் என்றோ பதிலளிக்கவில்லை..
பின் நரேந்திர மோடி பற்றி கேட்டார்கள்.. ’குஜராத் மாநிலத்தை சிறப்பாக ஆக்கியவர். திறமையாக ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது’ என பதிலளித்தேன். பின் கேள்விகள் சினிமா பற்றி திரும்பியது.. நான் என்ன படங்கள் செய்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு நிருபர் சரத்துடன் கூட்டணி சேர்வீர்களா என்று கேட்டார். ’அதற்கென்ன.. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாச்சே சேரலாம்’ என்று பதிலளித்தேன்..
அப்போது அவர் ’மேடம்.. நான் அவரது கட்சிக்கூட்டணி பற்றி கேட்டேன்’ என்றார். ’அப்படியா.. நான் சினிமா பற்றி கேட்டீர்கள் என்று நினைத்து பதில் சொன்னேன். அரசியல் பற்றி கேட்டீர்களா.. இப்போது பதில் சொல்லமுடியாது.. ஒரு மாதம் பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தேன்.
ஆனால் அதை சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டதாக மாற்றி தவறாக எழுதி விட்டார்கள். அந்த அவசர பரபரப்பில் நான் சொன்ன பதிலை மாற்றி எழுதி விட்டார்கள். உண்மைதான்.. நான் தமிழில், தமிழ் நாட்டு அரசியலில் புலமை பெற்றவள் கிடையாது. ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், நான் திரையுலகில் இருக்கிறேன். சரத் சார் நடிகர் சங்கத் தலைவராக இருக்கிறார். அவர் நடிகர் சங்கத்தையே ஒற்றுமையுடன் குடும்பம் போல கொண்டு செல்பவர். அவரது குடும்ப நண்பராக இருக்கிறேன். அவர் கட்சி நடத்துவது கூட தெரியாமலா இருக்கப்போகிறேன்...?
எனவே சரத்சார் பற்றி நான் சொன்ன கருத்தை மாற்றி பதிவு செய்துகொண்டால் சந்தோசப்படுவேன்... உங்கள் ஆதரவு என்றும் தேவை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். " இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.