தமிழ் சினிமா

காலா படத்தின் மும்பை படப்பிடிப்பு நிறைவு: அமெரிக்கா செல்கிறார் ரஜினி

ஸ்கிரீனன்

'காலா' படத்தின் மும்பை படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார் ரஜினி.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டது. ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வருகிறார்கள்.

ஜூன் 28-ம் தேதியோடு மும்பை படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 10-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

'காலா' படப்பிடிப்பை முடித்துவிட்டு, மும்பையிலிருந்து நேராக அமெரிக்கா செல்கிறார் ரஜினி. அங்கு உடல் பரிசோதனையை முடித்துவிட்டு, '2.0' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 12-ம் தேதி சென்னை திரும்பும் ரஜினி, 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளிலேயே மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT