சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் பூஜையை விரைவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
'வீரம்', 'வேதாளம்' படக் கூட்டணியான அஜித் - சிவா இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாயகி மற்றும் வில்லன் ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கு மட்டும் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு.
அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் இன்னும் அதிகாரபூர்வமாக யாருமே ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மேலும், வில்லனாக நடிப்பதற்கு சசிகுமார் மற்றும் அர்ஜூன் ஆகியோரிடம் பேசியதாக தகவல் வெளியானது. இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 16-ம் தேதி ஆடி மாதம் பிறக்க இருப்பதால் அதற்கு முன்னதாக படப்பூஜையைத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆடி மாதம் பிறந்துவிட்டால் படத்துக்குப் பூஜை போட முடியாது என்பதால் அதற்கு முன்பாகவே நடத்த இருக்கிறார்கள்.