'100% லவ்' தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக நடிக்க ஷரதா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
சுகுமார் இயக்கத்தில் நாக சைத்தன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '100% லவ்'. 2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கை, '100% லவ்' இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ளார். இதன் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எம்.எம். சந்திரமெளலி இயக்கவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலே' போன்ற பிரபல இந்தி படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். இதன் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு ஷரதா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பு தேதிகள் உறுதியானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிவித்தார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது