சிவகார்த்திகேயன் நடிப்பில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கும் 'ரஜினி முருகன்' படத் தலைப்புக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண தீர்மானித்தது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்கும் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. படத்திற்கு 'ரஜினி முருகன்' என்ற தலைப்பை முடிவு செய்திருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பில் ரஜினி என்று இருப்பதால், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினியிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. தனக்கு எந்தவித ஆட்சோபினையும் இல்லை என்று தலைப்பிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் ரஜினி.
'ரஜினி முருகன்' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30-ஆம் தேதி முதல் காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு இமான் இசையமைப்பாளராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னதாக, 'மைன் கூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி படத்தலைப்பிற்கு ஆட்சேபம் தெரிவித்து ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.