கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கவண்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கவண்'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மார்ச் 31ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
'கவண்' பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியது, "அடிப்படையில் ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு திறமைக்கு நான் ரசிகன். குறிப்பாக 'ஷக்கலக்க பேபி' பாடலில் அவரின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.
அவர் இயக்கிய படங்களுக்கு 'அயன்', 'அனேகன்', 'கோ' என அருமையான தமிழ் பெயர்களை தலைப்புகளாக சூட்டுகிறார். இந்தக் கதையை என்னிடம் வந்து சொன்னார். முதலில் தயங்கினேன். 3 முறை மறுத்தேன். கே.வி.ஆனந்த் பிடிவாதமாக இருந்தார்.
பெரிய நாயகர்களுக்கு பின்னால் போகாமல் கதையை நம்பி தொடர்ந்து படம் எடுத்து வருகிறார் கே.வி.ஆனந்த். எவ்வளவு பெரிய நாயகராக இருந்தாலும் கதை சரியாக இல்லாவிட்டால் வெற்றிபெற முடியாது.
உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பேன் என்றார் இயக்குநர். அதை படப்பிடிப்பு தளத்தில் கடைப்பிடித்தார்" என்று பேசினார் டி.ராஜேந்தர்.