தமிழ் சினிமா

என் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான்: பி.வாசு

செய்திப்பிரிவு

‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது உண்மைதான் என்று இயக்குநர் பி.வாசு கூறியுள்ளார்.

பி.வாசு இயக்கும் ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இரண்டு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை மறுத்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. இதுகுறித்து இயக்குநர் பி.வாசுவிடம் கேட்டோம். ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது.

நான் ரஜினி படங்களையே இயக்கியவன். ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பி.வாசுவை சந்திக்கவில்லை என்றோ, பி.வாசு யார் என்றோ குறிப்பிட்டுள்ளாரா? பி.வாசு, மணிரத்னம் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டுள்ளேன் என்றுதான் அவர் கூறியுள்ளார். இன்னும் எந்த படத்தில் முதலில் நடிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

நான் ஐஸ்வர்யா ராயை சந்தித்ததும், கதை கூறியதும் 100 சதவீதம் உண்மை. கதைதான் அந்தப் படத்தின் ஹீரோ. படம் முழுவதும் நாயகியை சுற்றியே இருக்கும். அந்த வேடத்தில் ஐஸ்வர்யா நடிக்கவிருக்கிறார். இது நாயகியை சுற்றியுள்ள கதை என்பதால் நான் நாயகர்களிடம் பேசும்போதும், மற்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போதும் நாயகி யார் என்று கேட்பார்கள். அதற்காக அளிக்கப்பட்ட முதல் பத்திரிகை செய்தி அது.

இந்தப் படம் படப்பிடிப்புக்கு போக குறைந்தபட்சம் இன்னும் 8 மாதங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது இப்போதே ஏன் அந்த பத்திரிகைகளுக்கு செய்தியை கொடுத்தீர்கள் என்றுதான் ஐஸ்வர்யா ராய் நினைக்கிறார். படத்துக்கு இன்னும் தேதிகள் ஒதுக்கவில்லையே என்று கேட்டார். நான் அவரிடம் எனக்குரிய காரணங்களை கூறிவிட்டேன். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராயோடு நிறைய காகங்கள் நடிக்கவிருக்கின்றன. இதற்காக பிரான்சில் இருந்து தனி பயிற்சியாளர்கள் வருகிறார்கள். காக்கைகளுக்கு பயிற்சி அளிக்க இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். ஆகவே, இப்படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவிருப்பது முழுக்க உண்மை. அவர் எனது படத்தில் நடிக்கமாட்டேன் என்றோ, எதுவும் முடிவாகவில்லை என்றோ அவர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடவில்லை.இவ்வாறு பி.வாசு கூறினார்.

SCROLL FOR NEXT