தமிழ் சினிமா

கபாலி சிந்தனைகள் அனைத்துமே சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை: இயக்குநர் ரஞ்சித்

ஸ்கிரீனன்

'கபாலி'யில் இருக்கும் சிந்தனைகள் அனைத்துமே சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான் என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட ரஞ்சித் பேசியது, "நிறைய விமர்சனங்கள் வருகிறது, அதில் சில கலவையான விமர்சனங்களும் இருக்கிறது. இப்படத்தை 'பாட்ஷா' மாதிரி தான் எதிர்பார்த்து வருவார்கள் என எனக்கு தெரியும். அது கிடையாது என்பது என் முதல் பேட்டியில் இருந்தே சொல்லி வருகிறேன். இது ஒரு கேங்ஸ்டருக்குள் இருக்கும் காதல் கதை தான்.

ரஜினி சாரின் நடிப்பைப் பற்றி பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள். குமுதவள்ளி உள்ளிட்ட பாத்திரங்கள், மலேசிய அரசியல் மற்றும் படத்தில் பேசப்பட்டு இருக்கும் அரசியல் அனைத்துமே ஒரு விவாதத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. மக்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி வெளிநாட்டிலும் இப்படத்தின் வசூல் ஒரு சாதனை என சொல்கிறார்கள். அதே சமயத்தில் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி இருக்கிறது. அது ஒரு பெரிய சோகம். அது இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

ரஜினி சாருக்கு பயங்கர சந்தோஷம். அவரும் என்னிடம் "இப்படத்தில் ஒரு வித்தியாசமான ரஜினியைப் பார்ப்பார்கள். அது மக்களுக்கு பிடிக்கும்" என்று தான் தெரிவித்தார். அது நடந்திருக்கிறது. 'முள்ளும் மலரும்', 'காளி' உள்ளிட்ட படங்களில் இருக்கும் ரஜினியைத் தான் காட்டியிருக்கிறேன். 'காளி' படத்தில் இருக்கும் கோபம் மட்டும் இருக்கும். எனது முதல் பேட்டியிலேயே இதனை தெளிவாக சொல்லிவிட்டேன்.

இப்படத்தில் பேசப்பட்டு இருக்கும் சிந்தனைகள் அனைத்துமே சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான். இந்த சமூகம் மாறுவதற்கு மேலும் சில விஷயங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் அனைத்து தரப்பு படங்களையுமே பார்ப்பார்கள். ரஜினி சார் படம் என்றவுடன் வேறு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகிறது. அதையும் இப்படத்தில் எப்படி காட்ட முடியுமோ காட்டியிருக்கிறோம்.

இப்படத்தின் க்ளைமாஸ் காட்சியின் போது திரையரங்கில் ஒரு அமைதி இருந்தது. அப்படித் தான் இருக்க வேண்டும் என நான் இக்கதை எழுதும் போதே நினைத்தேன். ரஜினி சார் பண்ணும் படங்களில் இருந்து வேறு ஒரு படம் பண்ணனும் என்று தான் என்னை அழைத்தார்கள். அதையே தான் நானும் பண்ணியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT