தமிழ் சினிமா

சினிமா விமர்சனம்: சமூக வலைதள கருத்தாளர்களுக்கு விவேக் வேண்டுகோள்

ஸ்கிரீனன்

'ஒரு படம் நன்றாக இல்லை என்பதை மக்கள் சொல்லட்டும். அதற்கான கால அவகாசத்தைக் கொடுங்கள்' என்று சமூக வலைதள விமர்சகர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா'. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். இம்மாதம் 28-ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் விவேக் பேசியது:

"முன்பெல்லாம் 4 திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி 100 நாட்கள் ஒடின. ஆனால், தற்போது 100 திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி 3 நாட்கள் ஒடுகிறது. அதற்கு காரணம் அச்சுறுத்தல்கள். முன்பு 'அன்னக்கிளி' என்ற ஒரு படம் 3 நாட்களில் மக்களிடையே எடுபடவில்லை என திரையரங்கில் இருந்து தூக்கியிருந்தால், இளையாராஜா என்ற மாபெரும் இசைக் கலைஞரை நாம் இழந்திருப்போம். சிவகுமார், சுஜாதா போன்ற மாபெரும் நடிகர்களை நாம் இழந்திருப்போம்.

அந்த கால அவகாசம் இன்றில்லை. இன்று படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே 'படம் சரியில்லை', 'போர் அடிக்கிறது' என்று தகவல்களை பரிமாறி படத்தின் ஓட்டத்தை தடை செய்யாதீர்கள். இதை ஒரு பொதுமக்களுக்கு வேண்டுக்கோளாக வைக்கிறேன். பத்திரிகையாளர்கள் தான் ஊடகவியலாளர்களாக இருந்தார்கள். பிறகு தொலைக்காட்சி வந்தது, இன்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மீடியாக்காராக ஆகிவிட்டார்கள். பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் பொறுப்பு, ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு இருக்காது.

இடைவேளைக்கு முன்பே 'மச்சான்.. வந்துவிடாதே' என்று சொல்லும் நபர்களிடம் நாம் அந்த பொறுப்பை எதிர்பார்க்க முடியாது. ஓவியம், சிற்பம் போன்றவற்றை நன்றாக இல்லை என்று சொல்லும்போது அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கும், கருத்துச் சொல்பவர்களோடும் முடிந்துவிடும். ஆனால் சினிமாவுக்கு அப்படியில்லை. பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் பலர் குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. அதை எளிதாக நன்றாக இல்லை என்று சொன்னால், பல பேருடைய உழைப்பு வீணாகிவிடும்.

படம் நன்றாக இல்லை என்பதை மக்கள் சொல்லட்டும். அதற்கான கால அவகாசத்தைக் கொடுங்கள். அதற்கு முன்பாகவே நம்முடைய கருத்தை மக்களின் மனதில் விதைப்பது தவறு. அதை ஒரு வேண்டுகோளாக அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.

நாயகிகளுக்கும் வேண்டுகோள்

நயன்தாரா படங்களை விளம்பரப்படுத்துவதில்லை குறித்த பேச்சு வரும் போது, "இன்று நாயகிகள் யாரும் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வருவதில்லை. அதை நான் தவறாகச் சொல்லவில்லை. "நாங்கள் வந்தால் படங்கள் ஒடுவதில்லை" என சென்டிமெண்ட்டாக பதிலளிக்கிறார்கள். இதே போன்று இறுதிகட்ட சம்பளம் வாங்கினால் சென்டிமெண்ட்டாக படங்கள் ஒடுவதில்லை என்று விட்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். படங்கள் நன்றாக ஒடினால் நன்றாக இருக்குமே என யோசித்து பார்க்க வேண்டும்" என்றார் விவேக்.

SCROLL FOR NEXT