தமிழ் சினிமா

ஆரம்பமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம்

ஸ்கிரீனன்

மதுரையில் ஏப்ரல் 5ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர் மன்றத்தின் தொடக்க விழா நடைபெற இருக்கிறது.

முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பல்வேறு ரசிகர்கள் இருந்தும், ரசிகர் மன்றம் என்று தனியாக இல்லை. இந்நிலையில், இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா முறையாக இளையராஜா ரசிகர் மன்றம் என்று தனியாக ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், "இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களும், நலம் விரும்பிகளும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். இதற்காக, ‘இளையராஜா ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது.

இளையராஜாவின் சம்மதத்துடன், அவருடைய மகன் கார்த்திக்ராஜா தலைமையில் இந்த அமைப்பு செயல்படும். பட அதிபர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோர் நிர்வாக அறங்காவலர்களாக இருப்பார்கள். அரசாங்க அங்கீகாரத்துடன் தொடங்கப்படும் அமைப்பு இது.

இளையராஜாவின் ரசிகர்கள், அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை சமூக விழிப்புணர்வு, சமூக நற்பணிகள், சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தி, நல்வழிப்படுத்தவே இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது.

சாதி, மதம், இனம், அரசியல் போன்றவைகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு இது. இதில், ஒரு கோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேர உள்ளனர்.

இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 5–ந்தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும். திரைப்பட துறையில் உள்ள முன்னணி நடிகர்–நடிகைகள், இதில் இணைய இருக்கிறார்கள்.’’ என்று கூறப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT