சூர்யா - லிங்குசாமி படத்திற்கு பெயர் சூட்டாமல் மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார்கள். படத்திற்கு 'ரெளடி' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானாலும் படக்குழு மறுப்பு தெரிவித்தது.
இதனால் படத்தலைப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சூர்யா - லிங்குசாமி படத்திற்கு 'அஞ்சான்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். 'அஞ்சான்' என்றால் அஞ்சாதவன், அச்சம் இல்லாதவன் என்று பொருள். இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இப்படத்தில் சூர்யா புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார். அவருடன் சமந்தா, வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரம்மானந்தம் என பலர் நடித்து வருகிறார்கள். லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். இசை யுவன் சங்கர் ராஜா, கலை ராஜீவன், எடிட்டிங் ஆண்டனி என படக்குழு பணியாற்றி வருகிறது.
இப்படம் குறித்து யு.டிவி நிறுவனத்தின் தென்னிந்திய முதன்மை அதிகாரி தனஞ்செயன், "மூன்றாவது முறையாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. எங்களுக்குள் அழுத்தமான நட்புறவும் ஆழமான புரிதலும் இருக்கின்றன. அவை மேலும் தொடரும். ஏற்கெனவே நாங்கள் இணைந்த 'வேட்டை' 'இவன்' வேற மாதிரி' இரண்டுமே வசூலில் வெற்றி பெற்றவை. அடுத்த மெகா பட்ஜெட் படமாக 'அஞ்சான்' இருக்கும். அதை நோக்கி பயணப்படுகிறோம். எங்கள் வெற்றி வரிசையின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
"திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமான நாங்கள் இணை தயாரிப்பாளர்களாக இருக்கும் யூடிவியுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம். முந்தைய எங்கள் படங்கள் எல்லாமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நாங்கள் அவர்களின் ஆதரவையும் புரிதலையும் மதிக்கிறோம். அடுத்த படமான 'அஞ்சானு'டன் இணைத்துக் கொள்வதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். தொழில் ரீதியாக அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.வியாபார திறமையும் விநியோக பலமும் கொண்டவர்கள் அது எங்களுக்கு பெரிய,பலமான பின்னணி சக்தியாக விளங்கும்.
இந்தப்படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்." என்று 'அஞ்சான்' இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் கோவாவில் நடைபெற இருக்கிறது. முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 'அஞ்சான்' ஒரே நேரத்தில் உருவாகிறது.