1930களின் சென்னை நகரத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இன்றைக்கு உள்ளதுபோல் ஜன நெருக்கடி இல்லையென்றாலும் கார்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அப்போதும்கூட தினமும் சினிமா படப்பிடிப்புக்கு வில்லு வண்டியில்தான் வருவாராம் அவர். 60கள் வரை இந்தப் பழக்கம் அவரிடம் இருந்தது. தயாரிப்பாளர்கள் கார் அனுப்பத் தயாராக இருந்தாலும் அவர் பிடிவாதமாக இருந்தார். அவர்தான் தமிழின் முதல் நகைச்சுவை நடிகையாகக் கொண்டாடப்படும் அங்கமுத்து.
அங்கமுத்து, 1914ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் எத்திராஜுலு நாயுடு - ஜீவரத்தினம் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். அங்கமுத்துக்கு 5 வயது இருக்கும்போது அவருடைய குடும்பம் மதராஸுக்குக் குடிபெயர்ந்தது. இவருக்கு ஏழு வயது இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயும் சில ஆண்டுகளுக்குள் காலமானார். செளகார்ப்பேட்டை பைராகி பள்ளியில் படித்த இவர், குடும்பச் சூழலின் காரணமாக ஏழாம் வகுப்புடன் படிப்பைப் பாதியில் கைவிடுகிறார். சண்முகம் செட்டியார் அவரை அழைத்துச் சென்று வேலூர் நாயர் கம்பெனியில் சேர்த்துவிடுகிறார். சில மாதங்களிலேயே அவர் தஞ்சை கோவிந்தன் கம்பெனிக்கு மாறுகிறார். அங்குக் கள்ள பார்ட் (திருடன்) வேடமேற்கிறார். பிறகு ரெங்கசுவாமி நாயுடு கம்பெனியுடன் மலேசியா செல்கிறார்.
சில வருடங்களில் அவர் பி.எஸ். ரத்னபாய், பி.எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள் நடத்திவந்த நாடகக் கம்பெனியில் இணைகிறார். எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராக பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற அன்றைய கால நாடக நட்சத்திரங்களுடன் நடித்ததால் அங்கமுத்து மிகப் புகழ்பெற்ற நடிகையானர்.
1933களில் தமிழில் பேசும் படங்கள் எடுக்கப்பட்டன. நியூ சினிமா தியேட்டர் நிறுவனத்தார், நந்தனார் கதையைக் கல்கத்தாவில் எடுக்க விரும்பினர். அந்தப் படத்தில் நடிக்க அங்கமுத்து சிபாரிசு செய்யப்பட்டார். ஆனால் அவர் அப்போது சென்னையில் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அங்கமுத்துக்கு அடுத்த வாய்ப்பு பாமா விஜயம் மூலம் வந்தது. 1934இல் சரஸ்வதிபாய், ரத்னபாய் சகோதரிகள் தயாரித்த பாமா விஜயம் படத்தில் அங்கமுத்து நடித்தார். ஏவிஎம்மின் முதல் பட முயற்சியான ரத்னாவளியில் அங்கமுத்து நடித்துள்ளார்.
ஆனால் அங்கமுத்துவால் முதல் நிலை நடிகராக முடியவில்லை. அதே காலத்தில் நடிகை டி.ஏ. மதுரம், என்.எஸ். கிருஷ்ணனுடன் நகைச்சுவை இணையாக நடித்துக்கொண்டிருந்தார். சி.டி. ராஜகாந்தமும் அப்போது பல படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார். இருந்தும் அங்கமுத்து 40களிலும் 50களிலும் பல படங்களில் தன் பங்களிப்பை அளித்துள்ளார். சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தியில் (1952) நடித்துள்ளார். மந்திரிகுமாரி (1950), தங்க மலை ரகசியம் (1957), மதுரை வீரன் (1960) களத்தூர் கண்ணம்மா (1960) போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் ரஜினிகாந்தின் குப்பத்து ராஜா (1979).
அங்கமுத்து தன் கடைசிக் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அங்கமுத்து 1994ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருடைய மைத்துனியின் பேரன், தனது பாட்டி அங்கமுத்து குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:
“அவர் பிற்காலத்தில் தன்னுடைய வில்லு வண்டியை எல்லாம் விற்றுவிட்டார். ரிக்ஷாவில்தான் சனிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வார். அவருடைய இளம் வயது படம் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும். அதைப் பார்த்தபடி, அங்கமுத்து பாட்டி கேட்பார், இது நீதானா என்று. தான் எப்படியெல்லாம் புகழுடனும் செல்வாக்குடனும் வாழ்ந்தேன் என்று பாட்டி சொல்லுப்போது நான் அதை ஒரு கிழவியின் உளறலாகத்தான் நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அவரது அருமை புரிகிறது” என்கிறார்.
தமிழில் ஆர். ஜெய்குமார்