நெஞ்சு வலி சிகிச்சைக்குப் பின் இளையராஜா வழக்கமான தன் பட இசைப் பணிகளை சென்னையில் தொடர்ந்தார்.
டிசம்பர் 23-ம் தேதி சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இசைக் கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இளையராஜாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். மலேசியாவில் நடைபெற்ற கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்கவில்லை. ஆனால், வீடியோ கான்பிரன்சிங் முறையில் திரையில் தோன்றி இசை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தற்போது ஒய்விற்கு பிறகு, மீண்டும் தன் இசைப் பணிகளை தொடங்கியுள்ளார் இளையராஜா. ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜா, பாடலாசிரியர் சினேகன் நடிப்பில் உருவாகும் 'இராஜராஜ சோழனின் போர்வாள்' படத்திற்காக ஒரு பாடலை உருவாக்கினார். திங்கிட்கிழமை (ஜன.6) அன்று, அப்பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்ந்தார்..
இளையராஜா உடல்நலம் பெற்று திரும்பியபின் பதிவு செய்யும் முதல் பாடல் என்பதாலும், 2014ல் இளையராஜா பதிவு செய்யும் முதல் பாடல் என்பதாலும், ’இராஜராஜ சோழனின் போர்வாள்’ படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது.