'மெட்ராஸ்' படத்தில் கார்த்தியை இயக்கிய ரஞ்சித், தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
கார்த்தி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிக்க 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார் ரஞ்சித். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். செப்டம்பர் 26-ஆம் தேதி இப்படம் வெளியானது.
விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. கார்த்தியின் யதார்த்தமான நடிப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள் என அனைத்து தரப்பிலும் பாராட்டு கிடைத்தது.
'மெட்ராஸ்' பட வெளியீட்டிற்கு பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் ரஞ்சித், தனது அடுத்த படம் பழங்குடியினர் சம்பந்தப்பட்டு இருக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து ரஞ்சித்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சூர்யாவை இயக்க இருப்பது உண்மை தான். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. ஆனால், கதை எதுவும் இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.
தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனைத் தொடர்ந்து விக்ரம் குமார், ஹரி, ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பது முடிவாகியுள்ளது.