தமிழ் சினிமா

மெட்ராஸ் திரைப்படத்துக்கு ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு’ விருது: எவிடென்ஸ் அமைப்பு வழங்குகிறது

செய்திப்பிரிவு

‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கு ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு’ விருதை எவிடென்ஸ் அமைப்பு வழங்குகிறது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவிடென்ஸ் அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

அத்துடன் இந்தத் தளத்தில் பணியாற்றும் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கிவருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு’ விருது ‘மெட்ராஸ்’ படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா மதுரையில் அக்டோபர் 25-ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘மெட்ராஸ்’ படத்தில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயக்குநர் ரஞ்சித் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்.

அப்பாவி இளைஞர்களை தங்களது சுயநலத்துக்காக அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பதை இப்படத்தில் இயக்குநர் அழகாக சொல்லியிருக்கிறார். சுகவாசிகளின் நகரமாக சித்தரிக்கப்படும் சென்னையில் சேரிகளும் இருக்கின்றன என்பதை ஒப்பனைக் கலப்பில்லாமல் படம் பிடித்திருக்கிறார். ஒரு இளைஞன் அரசியலுக்கு போவதால் அவனது மனைவி, மக்களுக்கு ஏற்படும் இயல்பான பதற்றத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில் அரசியலும் ஆதிக்கமும் இந்தச் சமுதாயத்தை எப்படிக் கூறுபோடுகிறது என்பதை யும், நாம் அதில் சிக்கிக் கொள்ளா மல் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் அழகாகச் சொல்லி இருக்கிறார்.

இந்தப் படம் எங்களின் பிரச்சாரத்துக்கும் ஒரு கருவியாக இருப்பதால் சமூக ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் இதை அங்கீகரிக்கிறோம்.

இதற்காக மதுரையில் நடக்கும் விழாவில் ‘மெட்ராஸ்’ படத்துக்கு ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு விருது’ வழங்குகிறோம். விருதுடன் சேர்ந்து ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு கதிர் கூறினார்.

இந்தப் படம் எங்களின் பிரச்சாரத்துக்கு ஒரு கருவியாக இருப்பதால் ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு விருது’ வழங்குகிறோம். மதுரையில் நடக்கும் விழாவில் விருதுடன் சேர்ந்து ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

SCROLL FOR NEXT