தமிழ் சினிமா

’படைப்பாளிக்கு மரியாதை இல்லை’ வருந்தும் தயாரிப்பாளர்

செய்திப்பிரிவு

’படைப்பாளிக்கு மரியாதை இல்லை.. முதலுக்கும் உத்தரவாதம் இல்லை’ என ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ பட இயக்குநர் - தயாரிப்பாளர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (ஃபெஃப்ஸி) அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

’சாய்ந்தாடு சாய்ந்தாடு’ என்ற படத்தை எழுதி, இயக்கி தயாரிக்கிறார் கஸாலி. இவர் தன் படத்தின் புரொமோஷன் படப்பிடிப்பில் தகராறு செய்ததாக கந்தவேல் என்பவர் மீது புகார் அளித்து ஃபெப்சி அமைப்பின் தலைவர் அமீருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தன் படத்திற்கு கந்தவேல் என்பவரை புரடக்‌ஷன் எக்சிகியூட்டிவாக அமர்த்தியதாகவும், ஆனால் அவர் சரியாக வேலை செய்யாததுடன், செலவினத்தில் கையாடல் செய்ததாகவும், கேட்டதற்கு ‘அப்படித்தான் செய்வேன், ஏதாவது தகராறு செய்தால் யூனியனில் சொல்லி படத்தை எடுக்க முடியாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் புரொமோஷனுக்காக படப்பிடிப்பு நடத்திய இடத்தில், இன்னும் இருவருடன் வந்து தகராறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

’வேறு எந்தத் துறையிலாவது பெரும் பணம் முதலீடு செய்த முதலாளிகள் (தயாரிப்பாளர்கள்) இப்படிப்பட்ட கேவலமான பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பார்களா?

ஏற்கெனவே கோடியில் முதலீடு செய்து, இதுவரை ஒரு ரூபாய்கூட வரவு இல்லாத நிலையில், மேலும் நேற்று இவர்கள் எனக்கு ஏற்படுத்திய ரூபாய் 95,000/- வரை நஷ்டத்தை நான் எப்படி பொறுத்துக்கொள்வது?

படைப்பாளிக்கும் மரியாதை இல்லை, போட்ட பணத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் இப்போது நான் என்ன செய்ய?’ எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கனவுத் தொழிற்சாலையில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் பிரச்சினை என்றால், சின்ன பட்ஜெட் படங்கள் வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்கின்றன.

SCROLL FOR NEXT