தமிழ் சினிமா

தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்!

மகராசன் மோகன்

தமிழ் சினிமா உலகில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதிகளில் முக்கியமானவர்கள் ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும். ஆனால் தலை தீபாவளியைக்கூட கொண்டாட நேரமில்லாமல் பரபரப்பாக இருக்கிறது இந்த ஜோடி. காரணம் வேலைப் பளு. இயக்குநர் பாலாவின் படம் உள்பட 8 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

காதல் திருமணம், தயாரிப்பாளர் அவதாரம், ஹீரோவாக அரிதாரம் என்று இந்த ஆண்டு ஜி.வி.பிரகாஷுக்கு முக்கியமான ஆண்டு. தலை தீபாவளி கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தவரை காதல் மனைவி சைந்தவியோடு அவரது அலுவகத்தில் சந்தித்தோம்! பிரகாஷிடம் பேசுவதற்கு முன் அவரது மனைவி சைந்தவியுடன் பேசினோம்.

ஜி.வி.பிரகாஷ், ஹீரோவா ஆவார்னு நீங்க எதிர்பார்த்தீங்களா?

அவர் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். அவருக்கு அப்போ மியூசிக் பிடித்த விஷயமா இருந்துச்சு. அதில் கவனம் செலுத்தினார். இப்போ தயாரிப்பாளர், ஹீரோ அவதாரங்களும் அவருக்கு பிடித்தே எடுத்திருக்கிறார். கண்டிப்பா இதிலும் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.

தலைத் தீபாவளிக்கு என்ன பரிசளித்தார்?

விசேஷ நாட்களில் மட்டும்தான் அவர் எனக்கு பரிசளிப்பார் என்று இல்லை. வெளியில் போகும்போது, ஒரு இடத்தில் பிடித்த ஒரு பொருளை பார்த்தால் உடனே வாங்கிக்கொடுத்து விடுவது அவர் வழக்கம். சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரிடம் அதை நானும் எதிர்பார்ப்பேன். ஆனால், அவருக்கு ரொம்ப நாட்கள் மறைத்து வைக்கத் தெரியாது. எது ஒன்றையும் வாங்கிய உடனே போன் செய்து சொல்லிடுவார்.

ஜி.வி பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக் கூட்டம் படத்தில் நீங்கள் பாடியிருக்கிறீர்களா?

இல்லை. பிரகாஷ் இசையமைக்கும் எந்த ஒரு படத்திலும் என்னுடைய குரல் பாடலுக்கு தேவை என்றால் மட்டுமே பாட சொல்லுவார். அதுவும் படத்தின் இயக்குநர் சொல்ல வேண்டும். அவர் தயாரிக்கும் படங்களாக இருந்தாலும் அப்படித்தான்!

இப்படி சைந்தவியுடன் பேசிக்கொண்டிருந்தபோதே ஜி.வி.பிரகாஷ் வந்து சேர்ந்தார். அவருடன் பேச்சைத் தொடர்ந்தோம்.

இந்த ஆண்டு உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கிறது. சைந்தவியை கைப்பிடித்த நேரம் என்று சொல்லலாமா?

கண்டிப்பாக. 12 ஆண்டுகால காதல். இப்போ காதலிக்கத் தொடங்கியது மாதிரி இருக்கு. இவ்ளோ நாட்கள் ஓடினதே தெரியலை. என்னோட எல்லா வளர்ச்சியிலும் உடன் இருக்குறவங்க. ரெண்டு பேரின் சினிமா வாழ்க்கையும் ரொம்பவே சந்தோஷமா நகர்ந்துக்கிட்டிருக்கு.

நடிக்கிற விஷயத்தை கேட்டப்போ ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்?

ஆரம்பத்தில் எப்படி தொடங்குவது என்று யோசனையாவே இருந்தது. இயல்பா ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது நடிக்கிற விஷயத்தை சொன்னேன். ''ம்ம்ம்.. நல்லா பண்ணு!'' என்று பாராட்டினார். சந்தோஷமாக இருந்தது.

தயாரிக்கும் படம், நடிக்கும் படம் இரண்டும் இப்போ எந்த நிலையில் இருக்கு?

’மதயானைக்கூட்டம்’, 90 சதவீத வேலைகள் முடிந்தது. தீபாவளிக்கு டிரெயிலர் ரெடியாகிவிடும். நவம்பர், டிசம்பரில் வெளியாகும். ஹீரோவாக நடிக்கும் ’பென்சில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. மார்ச், ஏப்ரலில் திரைக்கு வரும்.

தலை தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

சைந்தவியின் வீட்ல இருப்பேன். என்ன ஸ்பெஷல் இருக்கும் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்

SCROLL FOR NEXT