செய்யாத குற்றத்துக்காக சிறை தண்டனையை அனுபவிப்பவர்கள் அதே குற்றத்தை தொழிலாகச் செய்வதே 'போங்கு'.
கார் விற்பனை செய்யும் மிகப் பெரிய நிறுவனத்தில் நட்ராஜ், அர்ஜூனன், ரூகி சிங் ஆகிய மூவரும் பணிபுரிகிறார்கள். எம்.பி. தன் மகளுக்குப் பரிசாக அளிக்க ஒரு காரை அந்த நிறுவனத்தில் புக் செய்கிறார். அந்தக் காரை எம்.பி.யிடம் ஒப்படைப்பதற்காக நட்ராஜூம், அர்ஜூனும் செல்கிறார்கள். வழியில் ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் காரைத் திருடிச் செல்கிறது. இதனால் திருட்டுப் பழி சுமந்து நட்ராஜூம், அர்ஜூனனும் சிறைவாசம் செய்கிறார்கள். நட்ராஜ், அர்ஜூனன், ரூகி சிங் ஆகிய மூவரையும் கார் நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்துவிடுகிறது. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் எந்த நிறுவனமும் வேலை தர முன்வராததால் செய்யாத தப்பை தொழிலாக செய்யத் துணிகிறார்கள். இந்த மூவரின் வாழ்க்கை மாற யார் காரணம், அவரை இவர்கள் சந்தித்தார்களா, மூவரும் தங்கள் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொண்டார்கள் என்பதே போங்கு படத்தின் கதை.
கார் திருட்டு எனும் ஒற்றை வரியைக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. அதில் கார்ப்படேட் நிறுவனத்தின் சிஸ்டத்தையும், தப்பே செய்யாதவர்களின் தார்மீக கோபத்தையும் பின்புலமாக கட்டமைத்து கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தாஜ்.
'சதுரங்க வேட்டை' படத்தின் சாயலில் இருந்து நட்டி நட்ராஜ் இன்னும் வெளிவரவில்லை. அதே மாதிரி பன்ச், தத்துவம், தன்னிலை விளக்கம் சொல்ல முயற்சித்திருக்கிறார். இதனிடையே தன் ஹீரோயிஸத்தை நிரூபிக்க ரஜினியை வேறு நகலெடுத்துக் கொள்கிறார். இந்த இரண்டிலிருந்தும் விடுபட்டு நட்ராஜ் தனித்துவமான நடிப்பை வழங்குவது நல்லது. மற்றபடி, கார் திருடும் தருணங்களில் போடும் புத்திசாலித்தனமான திட்டங்கள், சவால் விடுவது, சண்டை போடுவது என கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அர்ஜூனன் காமெடி செய்கிறேன் என்று அலுப்பூட்டுகிறார். தேவையே இல்லாமல் சிரித்துத் தள்ளுவதும், இழுவையாக பேசுவதுமாக மனதில் ஒட்டாமல் கடந்து போகிறார். 'முண்டாசுப்பட்டி' ராமதாஸ், சாம்ஸ், பாவா லட்சுமணன் ஆகிய மூவர் மட்டுமே நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார்கள். சில இடங்களில் ராமதாஸின் நகைச்சுவையும் பல் இளிக்கிறது.
ரூகி சிங் பாத்திரம் அறிந்து கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். காதல், டூயட் என்று இல்லாமல் நாயகன், அவர் நண்பர்களுடன் வலம் வரும் ஒரு கதாபாத்திரமாகவே ரூகி சிங்கை உலவ விட்டிருப்பது ஆறுதல்.
ஷரத் லோகிதஸ்வா எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வழக்கம் போல குறையில்லாமல் நடித்திருக்கிறார். அதுல் குல்கர்னிக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. துப்பறிவது, நாயகனைப் பாராட்டுவது என்று சாதாரணமாகக் கடந்து போகிறார். அவரை இன்னும் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். ஸ்ரீகாந்த் தேவா இசை இரைச்சலையே வழங்கியுள்ளது. எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
கார் திருட்டு பற்றிய கதை. ஆனால், விதவிதமான திருட்டு முறைகள் பற்றியோ அதற்கான விவரணைகளையோ சரியாகப் பதிவு செய்யவில்லை. தேவையில்லா இடங்களில் வரும் குத்துப் பாடல்கள் சோர்வை வரவழைக்கின்றன. பாவா லட்சுமணன் ஒரே அறிமுகத்தில் ஷரத் லோகிதஸ்வா குறித்த ரகசியங்களைச் சொல்வது நம்பும்படியாக இல்லை. சவால் விட்டு காரைத் திருடும் காட்சிகளிலும் புத்திசாலித்தனமோ, சுவாரஸ்யமோ இல்லை. இதனால் 'போங்கு' போங்காட்டமாகவே உள்ளது.