தமிழ் சினிமா

‘வீரசிவாஜி’ தலைப்பை கேட்டதும் விக்ரம் பிரபு பயந்துவிட்டார்: இயக்குநர் கணேஷ் விநாயக் நேர்காணல்

மகராசன் மோகன்

காதல்,சென்டிமென்ட், காமெடி, சமூகப் பார்வை என்று பக்கா கமர்ஷியல் களத்தில் நின்று விக்ரம்பிரபு விளையாடியுள்ள ‘வீரசிவாஜி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. தொடரும் பணிகளுக்கு இடையே படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயக்குடன் ஒரு நேர்காணல்..

‘தகராறு’ படத்தை தொடர்ந்து நீங்கள் இயக்கும் இந்தப் படம் எதை மையப்படுத்தி உள்ளது?

முதல் படம் எனக்கு அடை யாளம் தந்தது. இந்தப் படம் எனக்கு நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். இது சீட்டிங் பின்னணிக் கதை. குறிப் பாக சொல்ல வேண்டுமானால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து சுழலும் களம். ஹீரோ டாக்ஸி டிரைவர். இந்த சமூகத்தின் பலதரப்பட்ட மக்களை ஒரு டாக்ஸி டிரைவர்தான் தினசரி கடந்துபோக முடியும் என்று நான் நினைத்தேன். அவரும் ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அதில் இருந்து மீண்டு இந்த சமூகத்துக் கான நபராக அவர் எப்படி மாறுகிறார் என்பதுதான் படம். சமூகப் பார்வையை பொழுது போக்கு அம்சத்தோடு சொல்லி யிருக்கிறோம்.

‘வீரசிவாஜி’ படத்தின் தலைப்பு கதைக்கான தலைப்பு மாதிரி இல்லையே. சிவாஜி பேரன் நடிப்பதால் அந்தப் பெயரை வைத்தீர்களா?

முதலில் வேறுவேறு தலைப்பு களை நோக்கித்தான் போனோம். ஒரு கட்டத்தில் நான்தான் ‘வீரசிவாஜி’ தலைப்பை விக்ரம் பிரபுவிடம் சொன்னேன். அவர், ‘தாத்தாவோட பெயரை பயன் படுத்துறோமே’ என்று பயந்து விட்டார். “அதெல்லாம் வேண் டாம். அவர் பெயர்ல படம் பண்ணினா, ரொம்ப கவனமா இருக்கணும். வேற தலைப்பு வைங்க!’’ என்றும் சொன்னார். நான்தான், ‘எந்தவிதமான தவறும் நடக்காது. எல்லாமே சரியாக அமையும்!’’ என்று சொல்லி அவரை உற்சாகப்படுத்தினேன். அதேமாதிரி எல்லாம் நல்லபடியாக அமைந்தது.

நாயகி ஷாமிலி வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறாராமே? எப்படி இந்தப் படத்துக்கு கொண்டு வந்தீர்கள்?

காதல், காமெடி, ஆக்‌ஷன் என்று கமர்ஷியல் பின்னணி யில் உருவாகும் படம் என் பதால் அதற்கு பொருத்தமான ஹீரோயினை தேடிக்கொண்டிருந் தோம். அப்போதுதான் ஷாமிலி யின் புகைப்படம் கிடைத்தது. சினிமா தெரிந்த குடும்ப பின்னணியை சேர்ந்தவர். முழு கதையும் அவருக்கு முன்பே சொல்லிவிட்டேன். அதனால் எங்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்தார். எங்கள் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் நடிப்பு பயிற்சியைத் தொடர அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலரும் இளம் இயக்குநர்களை தேடி வரும் சூழல் தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளதே?

இது ஆரோக்கியமான விஷயம்தான். அதே நேரத்தில் முந்தைய காலம் மாதிரி வியாபாரம் பெரிதாக இல்லாத சூழ்நிலையில் ஒரு படம் எடுத்து வெற்றி பெறுவது கஷ்டமாக உள்ளது. இந்த சூழ்நிலை ஒரு வகையான பயம்தான். ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் வரைக்கும் புதிய இயக்குநர்களிடம் கதை கேட்பதை அதிகம் விரும்புகிறார்கள். அப்படி கதை சொல்ல வரும் புதியவர்கள்தான் அந்தந்த ஹீரோக்களின் இமேஜுக்கு தகுந்த கதைகளை கொண்டு போக வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அவர்களை திரையில் காட்ட வேண்டும். அப்படி காட்டும்போதுதான் அந்த ஹீரோவை வைத்து எதிர்பார்த்த வியாபாரத்தை அடைய முடியும். அதுதான் இன்றைய முக்கிய தேவையாகவும், பார்வையாகவும் உள்ளது.

அடுத்து?

சமூகப் பார்வை மிக்க கமர்ஷியல் களத்தில் நின்றே படத்தை எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அந்த வரிசையில் அடுத்தும் சமகால சமூகப் பிரச்சினையை தாங்கிய கருவோடு அடுத்து வருவேன். ‘வீரசிவாஜி’ படத்தின் முழு பணிகளும் முடித்துவிட்டு அந்த வேலை தொடங்கும்.

SCROLL FOR NEXT