தமிழ் சினிமா

இன்று நினைத்தாலும் இனிக்கும்!

மகராசன் மோகன்

1960- களில், பீட்டில்ஸ் ராக் இசைக்குழு இசையுலகில் மிகவும் பிரபலம். ஜான் லென்னன், பால் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகிய மாபெரும் இசை ஜாம்பவான்களை கொண்டது அந்த இசைக்குழு. மேடை, ஆடைகள், இசைக்கருவி, நடனம், பாடும் விதம் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி அசத்திய குழு அது.

இப்படி ஒரு இசைக்குழு தமிழில் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில், 1979-ல் கே.பாலசந்தர் எடுத்த இளமைதுள்ளும் படம் 'நினைத்தாலே இனிக்கும்'. நகைச்சுவையோடு அழகான காதல் பயண அனுபவமாக வெளிவந்த இந்த படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். மற்றொரு நாயகனாக கலகலப்பான காமெடியால் பின்னியிருப்பார் ரஜினி. மையமாகத் தலையாட்டி கமலையும் ரசிகர்களையும் குழப்பும் அழகு தேவதையாக ஜெயப்பிரதா. இது எம்.எஸ்.விஸ்வநாதனின் படம் என்றே சொல்லும் அளவுக்கு பாடல்களில் அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். இளமைக்கொண்டாட்ட வரிகளுக்கு கண்ணதாசன். 'பாரதி கண்ணம்மா', 'நினைத்தாலே இனிக்கும்', 'யாதும் ஊரே' பாடல்கள் இன்றும் கொண்டாடப்படும் மெல்லிசை சொர்க்கங்கள்.

படத்தின் பின்னணி நாயகன் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். கமலுக்கு மயக்கும் குரலிலும், ரஜினிக்கு அதிரடி குரலிலும் பாடி அசத்தியிருப்பார். சண்டைக்காட்சியில் கூட ஒரு பாடல் உண்டு.

படத்தில் இடம்பெற்ற 'சம்போ சிவ சம்போ', 'நம்ம ஊரு சிங்காரி', 'எங்கேயும் எப்போதும்' போன்ற பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களின் பெருவிருப்பத்துக்கான பாடல்கள். சுஜாதாவின் வசனங்களில், ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை இழையோடும்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த இசைக்காவியம் ராஜ் வீடியோ விஷன் நிறுவனத்தால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, 34 வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திரைக்கு வருகிறது. பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினி கமல் நடித்த '16 வயதினிலே' படமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்தப் படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்படுகிறது.

சிவாஜி நடித்த 'கர்ணன்' படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியானபோது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. அந்த வகையில் வரும் நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே ஆகிய படங்களை வரவேற்கவே செய்வார்கள் என்கின்றனர், திரைத்துறையினர்! பார்க்கலாம்!

இயக்குநர் சமுத்திரகனி:

பல ஆண்டுகளுக்கு முன் எந்த அற்றலோடு இந்தப் படம் எடுக்கப்பட்டதோ… அதே ஆற்றலோடு இப்போது வெளிவரவிருக்கிறது. என் குருநாதர் கே.பி சார், சிறிதும் இளமை குறையாமல் காட்சிகளை அத்தனை நேர்த்தியாக படம் பிடித்திருப்பார். இரண்டு நாட்களுக்கு முன் அவரை சந்தித்தபோதுகூட,'' படம் திரும்பவும் ரிலீஸ் ஆகிறது. முதன்முதலாக ரிலீஸ் ஆகும்போது ஒருவித படபடப்பு இருந்தது. அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்!'' என்றார். அதுதான் கே.பி. சார்!

SCROLL FOR NEXT