தமிழ் உருவாகவுள்ள 'பெள்ளி சூப்புலு' பட தமிழ் ரீமேக்கின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தேவரகெண்டா, ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பெள்ளி சூப்புலு'. தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு விவேக் சாகர் இசையமைத்திருந்தார். தர்மாபாத் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
சுமார் ரூ.2 கோடிக்கும் குறைவான பொருட்செலவில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. ஜூலை மாதம் வெளியான இப்படத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்.
இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 'பெள்ளி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். அவருடைய இணை இயக்குநர் செந்தில் வீராசாமி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் ரீமேக்குக்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு.