மோகன்லால், மீனா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க ஜித்து ஜோசப் இயக்கிய படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி பல்வேறு மொழிகளிலும் ரீமேக் உரிமைக்கு போட்டியிட்டனர்.
தமிழில் சுரேஷ் பாலாஜி மற்றும் வைட் ஆங்கிள் நிறுவனம் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி, பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்த விக்ரம், இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், தற்போது இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க கமல் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
படப்பிடிப்பை 2014 இறுதியில் தொடங்க இருக்கிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க திட்டமிட்டு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் கமல். 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜித்து ஜோசப்பே தமிழ் ரீமேக்கையும் இயக்க இருக்கிறார்.
இந்தியில் மோகன்லால் வேடத்தில் நடிக்க ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.