வருகிறது ‘கோச்சடையான்’ வீறுகொண்டு கிளம்பிவிட்டார் கவிஞர் வைரமுத்து. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 9ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் வைரமுத்து 7 பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் சிவனை நோக்கி தவமிருந்த ‘கோச்சடை யான்’ ஆடும் ருத்திர தாண்டவ பாடல் ஒன்றும் அடங்கும்.
அந்தப்பாடல் உருவான தருணம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-
‘கோச்சடையான்’ என்றொரு படைத் தலைவன். அவன் ஒரு ஞான குருவும்கூட. தீவிர சிவ பக்தன். போர் முடித்துவிட்டு ருத்திர தாண்டவம் ஆடுகிறான். அந்த ருத்திர தாண்டவம் அவ்வளவு அழகாக படமாகி உள்ளது.
இந்தப் படத்தின் ரஜினியின் ருத்திர தாண்டவம் தனி சிறப்பாக அமையும். இந்த ஆடலுக்கு இசை மட்டும் இருந்தால் போதும் என்று முதலில் முடிவு எடுத்தார்கள். அழகாக அமைந்திருக்கும் இந்தப்பாட்டிற்கு இசை மட்டும் இருந்தால் படத்திற்கு மட்டும்தான் பயன்
படும். இது தொலைக்காட்சிக்கும் வர வேண்டும் என்றால் ஆடலை, பாடலாக மாற்றிவிட்டால் நிலைக்கும் என்றேன். நீண்ட விவாதத்திற்கு பின் பாட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுதான் படத்தின் தலைப்புப் பாடல். ‘அப்பர்’ பாடல் வரிகளை கொஞ்சம் கையாண்டு எழுதப்பட்ட பாடல் இது. ஆடல் மட்டும் போதாது. பாடலும் வேண்டும் என்று அமைந்த இந்த சிவ தாண்டவம் பெரிய ஈர்ப்புமிக்க காட்சியாக அமையும். சிறிய பாடல்
தான். ஆனால் இது வலிமையான பாடல். நீண்ட நாட்களுக்கு பின் இந்தப் படத்தின் பாடல் வரிகளை நறுந்தமிழோடு கேட்கலாம். அதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன்!’’ என்றார்.
‘கோச்சடையான்’ ஆடும் ருத்திர தாண்டவப் பாடல் வரிகள் இப்படித் தொடங்குகிறது...
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
கொன்றை சூடும் கோச்சடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
காற்றைக் கடந்தும் மூச்சுடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
காலம் கடந்தும் பேச்சுடையான்