'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் கொஞ்சம் இடைவெளி விட்டு இயக்கியுள்ள படம் 'மீண்டும் ஒரு காதல் கதை'. தெலுங்குப் படங்களையே ரீமேக் செய்து வந்த இயக்குநர் மித்ரன் இந்த முறை 'தட்டத்தின் மறையத்து' என்ற மலையாளப் படத்தை 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்.
இந்து மதத்தைச் சார்ந்த இளைஞர் வினோத் (வால்டர் பிலிப்ஸ் - அறிமுகம்) இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஆயிஷாவை (இஷா தல்வார்) காதலிக்கிறார். இந்த காதலுக்கு ஏற்படும் எதிர்ப்புகள், பிரச்சினைகள், தடைகள் என்னென்ன, அதை மீறி காதலர்கள் நிலை என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.
மதங்கள் தாண்டிய காதலைப் பதிவு செய்ய முயற்சித்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் அதற்கான அழுத்தத்தை, வலியை, பிரச்சினையை அலசத் தவறி இருக்கிறார்.
அறிமுக நடிகருக்கான கதைக்களத்தை வால்டர் பிலிப்ஸ் சரியாகத் தேர்வு செய்திருக்கிறார். நடிப்புக்கான அவரின் முயற்சிகள் கவனிக்க வைக்கின்றன. போலீஸ் என்றும் பார்க்காமல் துணிச்சலுடன் அடிப்பது, ஏக்கத்துடனும், தீரா காதலுடனும் இஷா தல்வார் வீட்டுக்கு சென்று புரபோஸ் செய்வது, காதலின் கண்ணியம் காக்க நீதிமன்றத்தில் தன் மீது பழியைப் போட்டுக்கொள்வது என நடிப்பதற்கான வாய்ப்புகளை வால்டர் ஓரளவு பயன்படுத்திக்கொள்கிறார்.
காதலை மையமாகக் கொண்ட படத்தில் கதாநாயகி பாத்திரத்துக்கான நியாயமான பங்களிப்பை இஷா தல்வார் நிறைவாக வழங்கியுள்ளார். ஆனால், 'தட்டத்தின் மறையத்து' படத்தில் இருந்த இஷாவின் பார்வை, தோற்றம், தவிப்பு இதில் மிஸ்ஸிங்.
மனோஜ்.கே.ஜெயனின் நடிப்பில் செயற்கைத்தனம் வெளிப்படையாகத் தெரிகிறது. தலைவாசல் விஜய்யின் நடிப்பு கச்சிதம்.
அர்ஜூனன், வித்யூ லேகா ராமன், வெங்கி, நாசர், வனிதா கிருஷ்ணசந்திரன், சிங்கமுத்து ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
காட்சிகளைக் கவிதையாகக் கடத்தும் விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும், ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் படத்துக்கு மிகப் பெரிய பலம். ஜி.வி.பிரகாஷின் இசையில் ஹே பெண்ணே பாடல் ரசிக்க வைக்கிறது.
''அளவுக்கு அதிகமா அனுசரிச்சுப் போறதும் அடிமைத்தனம்'', ''முடிவெடுக்கிற அதிகாரம் நமக்கில்லாத போது ஆசைப்படுறதுக்கு நமக்கு அனுமதி இல்லை'' போன்ற ஜெகஜீவனின் வசனங்கள் சுளீர் ரகம்.
முந்தைய படங்களில் காதலின் உணர்வுகளை மென்மையாக, கண்ணியமாக, உண்மையாகக் காட்சிப்படுத்திய இயக்குநர் மித்ரன் இப்படத்தில் வலுவான காட்சிகளை கட்டமைக்கவில்லை என்பது பெருங்குறை. கதாபாத்திரங்களுக்கு சூழல் தரும் நெருக்கடி, காதலின் உணர்வுகளின் ஆழத்தை பிரதிபலிக்காத காட்சிகளால் ரசிகர்கள் எந்த விதத்திலும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. தொடர்புகொள்ள முடியாத அளவில் படம் திரையில் தேமே என்று கடந்துபோகிறது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் மை போட்டு 'பெங்களூரு நாட்கள்' படத்தின் பாடலை நினைவுபடுத்துகிறது. சிங்கமுத்துவின் நகைச்சுவை முயற்சிகள் எந்தவிதத்திலும் எடுபடவில்லை. மனோஜ் கே. ஜெயன் அண்ட் கோ போலீஸாக செயல்படாமல், காதல் தூதுவர்களாகவே படம் முழுக்க இருப்பது உறுத்தல்.
மொத்தத்தில் 'மீண்டும் ஒரு காதல் கதை' இன்னொரு ரீமேக் படமாக உள்ளது