தமிழ் சினிமா

இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன்: யோகி பாபு திட்டவட்டம்

ஸ்கிரீனன்

இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன் என பத்திரிகையாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் யோகி பாபு.

யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்மபிரபு'. ரங்கநாதன் தயாரித்துள்ள இந்தப் படத்தை, முத்துக்குமரன் இயக்கியுள்ளார்.  இன்று (ஜூன் 28) வெளியாகியுள்ள இந்தப் படத்தை, ரசிகர்களுடன் கண்டுகளித்தார் யோகி பாபு. தன் பட வெளியீட்டை முன்னிட்டு 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

'தர்மபிரபு' முதல் காட்சி முடிந்து வெளியே வந்த யோகி பாபு பத்திரிகையாளர்களிடம், “ 'தர்மபிரபு' படம் பார்த்துவிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். உங்களது உண்மையான விமர்சனத்தைக் கூறுங்கள். கண்டிப்பாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ‘ஹீரோவாக நடித்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?' என்ற கேள்விக்கு, “ஹீரோவாக நடிக்கக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். உலகத்துக்கே ஹீரோ எமதர்மன்தான். அந்தக் கதாபாத்திரம் கிடைத்ததுக்கு சந்தோஷப்படுகிறேன்.

இனிமேல் வழக்கம் போல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைவருடனும் இணைந்து காமெடிதான் பண்ணுவேன். நண்பர்கள் இருவரிடம் இணைந்து படம் பண்ணலாம் என்று சொல்லியிருந்தேன். அதை முடித்துவிட்டேன். வேறு எந்தவொரு படத்திலும் நாயகனாகப் பண்ணும் திட்டமில்லை” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.

SCROLL FOR NEXT