ஆகஸ்ட் 1-ம் தேதியே 'நேர்கொண்ட பார்வை' படத்தை வெளிக்கொண்டு வர படக்குழு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டே ஆகஸ்ட் 10-ம் தேதியைத் தேர்வு செய்துள்ளது படக்குழு. ஆனால், தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி வந்தால் என்ன என்ற கோரிக்கை விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஆகஸ்ட் 10-ம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால், ஆகஸ்ட் 1-ம் தேதி வியாழக்கிழமையே வெளியானால் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது, இறுதிக்கட்டப் பணிகள் முடிவு பெறுவதைப் பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் நடைபெற்றால், ஆகஸ்ட் 9-ம் தேதி சில பெரிய படங்கள் வெளியாகக் கூடும். இதனால், 'நேர்கொண்ட பார்வை' முடிவு என்ன என்பதற்காக சில பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவுள்ளார். இதன் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.